Skip to main content

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய நபர் சரண்!

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

The person who spread the fake video about the laborer n poilice custody!

 

பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. மேலும், பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து பீகாரில் பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏக்கள் குழு தமிழகத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு விளக்கமளித்து பேசிய பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், “தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படும் செய்திகளை தமிழக டி.ஜி.பி. நிராகரித்துள்ளார். உறுதிப்படுத்தப்படாத விவகாரங்களை பாஜக விவாதிக்கிறது” என்று பேசினார். 

 

அதனைத் தொடர்ந்து பீகாரில் இருந்து வந்த குழு ஒன்று இங்கு வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் பாதுகாப்பைப் பற்றி கேட்டறிந்தது. மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

 

தமிழ்நாடு காவல்துறை வெளிமாநிலத் தொழிலாளிகள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை பதிவிட்டவர்களை சைபர் க்ரைம் பிரிவினருடன் இணைந்து கண்டறிந்து கைது செய்து வந்தது. அதேபோல், பீகார் அரசும் போலி வீடியோக்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ பரப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் இன்று பீகார் மாநிலம் ஜகதீஷ்பூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்