Skip to main content

குஜராத் வர்த்தக மாநாடு; உலகத் தலைவர்கள் பங்கேற்பு

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Participation of world leaders Gujarat Trade Conference

குஜராத் மாநிலம், காந்தி நகர்ப் பகுதியில் ‘துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு’ என்ற மாநாட்டை பிரதமர் மோடி இன்று (10-01-24) தொடங்கி வைத்தார். பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையில் வளர்ச்சிகளை மேற்கொள்ள முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இந்த மாநாடு நடைபெறுகிறது. 

துடிப்பான குஜராத் உலக உச்சி மாநாடு என்ற தலைப்பிலான 10வது வர்த்தக மாநாடு இன்று (10-01-24) தொடங்கி 3 நாட்கள் வரை காந்தி நகரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு உச்சி மாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டில், முக்கிய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கவுதம் அம்பானி, டாடா நிறுவனத் தலைவர், மைக்ரோசாப்ட் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 

மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (08-01-24) குஜராத்திற்கு சென்றடைந்தார். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக குஜராத் மாநிலத்திற்கு ஏராளமான உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக அளவில் முன்னணியில் இருக்கும் நிறுவன தலைமை நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்த ஐக்கிய அரபு அமீரகம் முகமது பின் சையத் அல் நயான், செக் குடியரசு நாட்டின் பிரதமர், திமோர் லெஸ்டே அதிபர், மொசாம்பிக் அதிபர் உள்ளிட்ட உலகத் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

முன்னதாக, இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் அதிபர் முகமது பின் சையத் அல் நயான் நேற்று (09-01-24) குஜராத் வந்தடைந்தார். அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த அவரைப் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அதன்பின், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடியும், முகமது பின் சையத் அல் நயானும் சாலையில் திறந்தவெளி வாகனத்தில் மக்களைச் சந்தித்தபடி ஊர்வலம் சென்றனர். இதற்காக குஜராத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அண்மையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், குஜராத்தில் தற்போது முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்