Skip to main content

ஆட்சியை கைப்பற்ற 'பஞ்ச பாண்டவர்' - மம்தாவின் புதிய வியூகம்!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

MAMATA BANERJEE

 

மேற்கு வங்கத்தில் மாபெரும் வெற்றியுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட திரிணாமூல் காங்கிரஸ், அடுத்ததாக 2023ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கவிருக்கும் திரிபுரா மாநிலத்தைக் குறிவைத்து காய்களை நகர்த்திவருகிறது. சில வாரங்களுக்கு முன்பு அம்மாநில ஆளுங்கட்சியான பாஜகவில் இருந்து ஒன்பது எம்.எல்.ஏக்களை திரிணாமூல் காங்கிரஸ் இழுக்க முயல்வதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து கட்சி தாவத் தயாரான எம்.எல்.ஏக்களைச் சந்தித்து பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

 

இதன்தொடர்ச்சியாக தற்போது திரிணாமூல் காங்கிரஸ், திரிபுரா சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை அதிகாரப்பூர்வமாகவே தொடங்கியுள்ளது. அந்தவகையில், முன்னாள் அமைச்சர் பிரகாஷ் சந்திர தாஸ், முன்னாள் எம்எல்ஏ சுபால் பவ்மிக், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) உறுப்பினர் பன்னா தேப் உள்ளிட்ட ஏழு காங்கிரஸ் தலைவர்களை திரிபுரா திரிணாமூல் காங்கிரஸ் தனது கட்சியில் இணைத்தது.

 

இதனைத் தொடர்ந்து தற்போது மம்தா பானர்ஜி, 'பஞ்ச பாண்டவர்' என்ற பெயரில் குழு ஒன்றை அமைத்துள்ளார். மேற்கு வங்க சட்ட அமைச்சர், கல்வியமைச்சர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்தக் குழு, சட்டமன்றத் தேர்தலையொட்டி திரிபுராவில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

 

ஏற்கனவே திரிபுரா மாநிலத்தில், தங்கள் கட்சியின் நிலை குறித்தும், செல்வாக்கு குறித்து திரிணாமூல் காங்கிரஸ் ஆய்வு செய்துள்ளதாகவும், தற்போது ஆட்சியமைப்பதற்கான வியூகத்தை அக்கட்சி வகுத்துவருவதாகவும் கூறப்படுகிறது. திரிணாமூல் காங்கிரஸ் இதுவரை திரிபுராவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இருப்பினும் தற்போது திரிபுராவில் நிலவும் பாஜக எதிர்ப்பு அலையைப் பயன்படுத்தி அங்கு திரிணாமூல் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்த மம்தா முயல்வதாகவும், இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் திரிபுரா காங்கிரஸ் தலைவரான பிரத்யோத் கிஷோர் தெப்பர்மாவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஏற்கனவே திரிபுராவில் நிலவிவரும் பாஜக எதிர்ப்பு அலையை நிறுத்தும் விதமாக, அம்மாநில முதல்வரை மாற்ற பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்