Skip to main content

“நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறிய மோடியை கண்டிக்கிறோம்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Mallikarjun Kharge condemn Modi

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வந்ததால், இந்த இரு அவைகளிலும் எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து, இதுவரை மொத்தமாக இந்த கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் நேற்று (21-12-23) போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணியாக சென்ற சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக பதாகைகளை ஏந்திக் கொண்டு கோஷங்களை எழுப்பி சென்றனர். இதை தொடர்ந்து விஜய் சவுக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் பேசும் உரிமை உண்டு. அதன்படி தான் நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பேச மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் மக்களின் உணர்வுகளை தெரிவிப்பது எங்களின் கடமையாகும். 

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலுக்கு யார் பொறுப்பு?. இது குறித்து அவையில் நாங்கள் கேள்வி எழுப்ப விரும்பினோம். ஆனால், எங்களை பேச அனுமதிக்காமல், கேள்வி எழுப்பிய உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்திருப்பது என்பது கண்டனத்திற்குரியது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டிய இருவரும் வராமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தை மக்களவை, மாநிலங்களவையில் பேசாமல் வாரணாசி, அகமாதபாத்தில் தொலைக்காட்சியில் பேசிக் கொண்டிருக்கிறார். இது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறிய செயல். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனநாயக முறையில் அரசு நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்