கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு முன்பே ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.
மேலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இன்டர்நெட் சேவை படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்பியது. இந்த சூழலில் கடந்த 18ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் துணைநிலை ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பிறகு அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பிறகு ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளுக்கு, பிரதமர் தலைமையிலான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலை நடத்துவது, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்த்து வழங்வகுவது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் அரசியல் கட்சிகள் வைத்த கோரிக்கைகள் என்னென்ன என்பது குறித்து பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "கூட்டத்தில் 5 கோரிக்கைகளை நாங்கள் வைத்தோம். விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்தை வழங்கவேண்டும், ஜனநாயகத்தை மீட்டெடுக்க சட்டமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும், காஷ்மீர் பண்டிதர்களுக்கு ஜம்மு காஷ்மீரில் மறுவாழ்வு அளிக்க வேண்டும். அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வைத்தோம். குடியேற்ற விதிகள் தொடர்பாகவும் கோரிக்கை வைத்தோம்" என தெரிவித்தார்.
மேலும், "மத்திய உள்துறை அமைச்சர், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்து வழங்க அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்" என்ற குலாம் நபி ஆசாத், "அனைத்து தலைவர்களும் முழுமையான ஜம்மு காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்த்தை வலியுறுத்தினோம்" எனவும் கூறினார்.