Skip to main content

மசூதிக்கான நிலம் யாருக்குச் சொந்தம்? - அயோத்தியில் மீண்டும் நில சர்ச்சை!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

ayodhya masjid

 

பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டது. இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கும்படியும் ஆணையிட்டது. இதனையடுத்து ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டடப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மசூதிக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது மசூதி கட்டுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன. கட்டப்படவிருக்கும் மசூதியின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு உரிமைகோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

 

டெல்லியைச் சேர்ந்த சகோதரிகளான ராணி பலூஜா மற்றும் ராம ராணி பஞ்சாபி ஆகியோர், அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்களது தந்தை 1947 இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது அயோத்தியில் வந்து தங்கினார். அப்போது அவருக்கு 28 ஏக்கர் நிலம் ஐந்து வருடங்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஐந்து வருடங்களுக்குப் பிறகும், அந்த நிலம் தங்களது தந்தையிடமே இருந்தது. பின்னர் நில வருவாய்ப் பதிவுகளில், தங்களது தந்தையின் பெயர் சேர்க்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் அந்த மனுவில், மீண்டும் எங்களது தந்தையின் பெயர் நில வருவாய்ப் பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டது. மேல்முறையீடு செய்த பிறகு அவரது பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. தற்போது மீண்டும் அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராகச் செய்யப்பட்ட மேல்முறையீடு அதிகாரிகளின் முன்னிலையில் உள்ளது. ஆனால், அதிகாரிகள் அதைப் பரிசீலிக்காமல் எங்களின் 28 ஏக்கர் நிலத்தில் இருந்து ஐந்து ஏக்கரை மசூதி கட்ட ஒதுக்கியுள்ளனர். எங்களின், மேல்முறையீட்டின் மீது முடிவெடுக்காமல் மசூதிக்கு நிலம் வழங்குவதற்குத் தடை விதிக்கவேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு வரும் 8 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்