Skip to main content

ராகுல் காந்தியின் வருகையைப் புறக்கணித்தார்களா பஞ்சாப் காங்கிரஸ் எம்.பிக்கள்? 

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

rahul gandhi

 

பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இன்று பஞ்சாப் சென்றுள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களோடு பொற்கோயிலில் வழிபாடு நடத்தினார். அதனைத்தொடர்ந்து துர்கியான மந்திர் மற்றும் பகவான் வால்மீகி தீரத் ஸ்தலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களோடு வழிபாடு நடத்தவுள்ள ராகுல் காந்தி, ஜலந்தரில் மெய்நிகர் பேரணியில் உரையாற்றவுள்ளார்.

 

இந்தநிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து காங்கிரஸ் எம்.பிக்கள், ராகுல் காந்தியின் வருகையைப் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி தலைமை தாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்தப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், இந்தத் தகவல்கள் பொய்யானவை எனத் தெரிவித்துள்ளார்.

 

ராகுல் காந்தி வருகையைப் புறக்கணித்துள்ளதாகக் கூறப்படும் எம்.பிக்களில் ஒருவரான பிரனீத் கவுர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியுள்ள கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி ஆவார். பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக அவருக்கு காங்கிரஸ், ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

அதேபோல், ராகுல் காந்தியின் வருகையைப் புறக்கணித்துள்ளதாகக் கூறப்படும் மற்றொரு எம்.பியான ஜஸ்பீர் சிங் கில், "எனது தனிப்பட்ட கடமையின் காரணமாக என்னால் அமிர்தசரஸ் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. இதனை நான் எனது தலைமைக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தேன். தயவு செய்து எந்த அனுமானமும் செய்ய வேண்டாம்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது இன்னொரு ட்விட்டில், ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு 117 தொகுதிகளின் வேட்பாளர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்ததாகவும், எம்.பிக்கள் அழைக்கப்படவில்லை எனவும், எனவே புறக்கணிப்பு நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்