Skip to main content

“முடிந்தால் கைது செய்யுங்கள்” - பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்!

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
Arvind Kejriwal challenges Prime Minister Modi

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசாடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 50 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் கடந்த 10ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. 

இதற்கிடையே, டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, ‘டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டேன்’ எனக் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் உடனடியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தை அடைந்த போது அங்கு எம்.பி.ஸ்வாதி மாலிவால் இல்லை என்று கூறப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Arvind Kejriwal challenges Prime Minister Modi

அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால், தான் தாக்கப்பட்டதாக போலீசாரிடம் கூறிய ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை. இருப்பினும், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் மீது கடந்த 16 ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர். அதன் அடிப்படையில், டெல்லி போலீசார் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக கூறிய அவர், “ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து தலைவர்களையும் பிரதமர் மோடி சிறையில் அடைக்க முயற்சிக்கிறார். ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை கைது செய்த பிரதமர் மோடி, தற்போது எனது உதவியாளரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். நாளை ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் பா.ஜ.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நாளை நண்பகல் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் சென்று பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி, முடிந்தால் தனது கட்சி தலைவர்களை சிறையில் அடைத்துக் கொள்ளட்டும்” என்று கூறினார். 

ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் முன்ஜாமீன் வழங்க மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்