Skip to main content

இரு அவைகளிலும் நிறைவேற்றம்... இன்று இரவே சட்டமாகிறது வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா? 

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

farmers

 

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (29.11.2021) தொடங்கியது. இந்தநிலையில், மக்களவை கூடியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

 

இதனையடுத்து, மக்களவை மீண்டும் கூடியதும், ஏற்கனவே அறிவித்தபடி மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதாவை மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பலத்த அமளிக்கிடையே தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து அந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

 

அதேநேரத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா, விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதன்பிறகு அவை மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால், அவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஒரேநாளில் மக்களவை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே, மாநிலங்களவையிலும் அமளிகளுக்கிடையே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், இந்த மசோதா இன்றே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட இருப்பதாகவும், இன்றே குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்க இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்