Skip to main content

தோனி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

Dhoni's case adjourned

 

100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சி மீதான குற்றச்சாட்டுகளை வரையறை செய்வதற்கான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

 

ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், ஜீ தொலைகாட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ஆம் அண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். ஜீ தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சி ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

 

இந்த வழக்கில் ஜீ தொலைக்காட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மேட்ச் பிக்ஸிங் செய்தது, சூதாட்டத்தில் தோனிக்கு தொடர்பிருப்பதாக இடைத்தரகர் கிட்டியின் சாட்சியம் அளித்தது, தோனியை காப்பாற்றும் நோக்கில் கிட்டியின் வாக்குமூலத்தை சிபிசிஐடி மறைத்தற்கு முத்கல் கமிட்டி கண்டித்தது ஆகியவற்றை மறைத்து தோனி வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தோனி என்பவர் கிரிக்கெட்டை விட உயர்ந்தவர் இல்லை என்றும், அது சூதாட்டத்தின் அடித்தளமாக மாறிவருவதாகவும், அதுபோலதான் சமீபத்தில் உச்ச நீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளதாகவும் பதில்மனுவில் தெரிவித்திருந்தது.

 

தோனி மீது தங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை என்றும், கிரிக்கெட்டின் நடைபெறும் சூதாட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவரவே விவாத நிகழ்ச்சியை நடத்தியதாகவும், ஆனால் ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கவே தோனி வழக்கு தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, தனிமனித உரிமையை பாதிக்காமல் கருத்து சுதந்திரம் என்ற உரிமை இருக்க வேண்டும்  என தெரிவித்து கிரிகெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில்  குற்றச்சாட்டுகள் வரையறுப்பதற்காக வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்