Skip to main content

அரசு செய்த தணிக்கையில் 72 சதவீதம் வரை அதிகரித்த கரோனா மரணங்கள் - பீகாரில் அதிர்ச்சி!

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

BIHAR COVID DEATH TOLL

 

இந்தியாவில் இதுவரை கரோனாவால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில், பீகாரில் இன்றுவரை (10.06.2021) 5,500க்கும் குறைவான மரணங்களே ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துவந்தது. இந்தநிலையில், கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் முறைகேடுகள் இருப்பதாக கூறிய பாட்னா உயர் நீதிமன்றம், கரோனா இரண்டாவது அலையில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

 

இதனைத்தொடர்ந்து பீகார் அரசு, கரோனா பலி எண்ணிக்கையைத் தணிக்கை செய்தது. இந்தத் தணிக்கையில், அம்மாநிலத்தில் கரோனாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே கூறப்பட்டதைவிட 72 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் 3,951 மரணங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பீகாரில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9,429 ஆக அதிகரித்துள்ளது.

 

3,951 மரணங்கள் இதுவரை கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) பிரத்யயா அமிர்த், “தனியார் மருத்துவமனைகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள், வீட்டுத் தனிமையில் ஏற்பட்ட உயிரிழப்புகள், கரோனாவிற்குப் பிந்தைய பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆகியவைக் கணக்கில் சேர்க்கப்பட்டதால், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்