தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் வருகிற 19ம் தேதி (நாளை ) முதல் 31ம் தேதி வரை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியின் தொடக்க விழா நாளை மறுதினம் மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் நாளை சென்னை வருகிறார். பின்னர் மாலை 5:45 மணி அளவில் கேலோ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கி விட்டு மறுநாள் ( 20ம் தேதி) பிரதமர் மோடி திருச்சி திருவரங்கம் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் வருகிற 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருவரங்கம் ரங்கநாதரை தரிசிக்க அவர் திருச்சிக்கு வருவதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு செல்கிறார். பின்னர் அங்கே தரிசனம் செய்துவிட்டு மாலையில் நேராக அயோத்தி புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி நாளை தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் இந்த ஆலோசனை எனது நடைபெற்று வருகிறது. இதில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.அதேபோல் தமிழகத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரை அனைத்து ரயில்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் திருச்சி, ராமேஸ்வரம் ரயில் நிலையங்களை முழு கட்டுப்பாட்டில் எடுத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே ஊழியர்களுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.