Skip to main content

கர்நாடக எதிர்ப்புக்கு மத்திய அரசு பணியக் கூடாது! அன்புமணி ராமதாஸ்

Published on 18/02/2018 | Edited on 18/02/2018


மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியுள்ளார். கர்நாடக எதிர்ப்புக்கு மத்திய அரசு பணியக் கூடாது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:-
 

காவிரி நீரில் தமிழகத்திற்குரிய பங்கு 14.74 டி.எம்.சி அளவுக்கு குறைக்கப்பட்டு விட்ட நிலையில்,  காவிரி மேலாண்மை வாரியத்தை அடுத்த 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது தான் தமிழக விவசாயிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. ஆனால், மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியுள்ளார். வெந்த புண்ணில்  வேல் பாய்ச்சுவது போன்ற  சித்தராமய்யாவின் இந்த எதிர்ப்பு கண்டிக்கத்தக்கது.

 

anbumani ramadoss


 

காவிரிப் பிரச்சினை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று முன்நாள் அளித்த தீர்ப்பு வெளியான சிறிது நேரத்தில் காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு குறைக்கப்பட்டு, கர்நாடக மாநிலத்திற்குரிய பங்கு அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், இதன்மூலம் நீதி வென்றுள்ளது என்றும் சித்தராமய்யா கூறியிருந்தார். கர்நாடகத்திற்கு அதிக தண்ணீர் தர வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விழுந்து விழுந்து வரவேற்கும்  சித்தராமய்யா, நீர்ப்பகிர்வை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற ஆணையை மட்டும் ஏற்க மறுப்பது  எந்த வகையில் நியாயம்? தமிழ்நாட்டிற்கு ஒரு நியாயம், கர்நாடகத்துக்கு ஒரு நியாயம் என்பதை ஏற்க முடியாது.
 

காவிரி விவகாரத்தில் மேற்பார்வைக் குழு ஏற்கனவே செயல்பட்டு வருவதால், மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை என்று சித்தராமய்யா கூறியிருப்பது பிரச்சினையை திசை திருப்பும் செயலாகும். காவிரிப் பிரச்சினையில் மேற்பார்வைக்குழு என்பது தற்காலிகமான ஏற்பாடு ஆகும். காவிரிச் சிக்கலில் நடுவர் மன்றம் அதன் இறுதித் தீர்ப்பை 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி வழங்கியது. அடுத்த 2 மாதங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன் நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி நதிநீர் ஆணையமும், கண்காணிப்புக் குழுவும் இருந்தன. நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கிய நிலையில், இடைக்காலத் தீர்ப்பு காலாவதி ஆனதைக் காரணம் காட்டி அந்த அமைப்புகள் கலைக்கப்பட்டன. அதன்பின் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த எந்த அமைப்பும் இல்லாததை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்தே இடைக்கால ஏற்பாடாக மேற்பார்வைக்குழுவை அமைக்க 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அந்த மேற்பார்வைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அந்தக் குழு அமைக்கப் பட்ட நாளில் இருந்து இதுவரை ஒரு முறை மட்டுமே கூடியிருக்கிறது. அதனாலும் எந்த பயனுமில்லை.
 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து, மேற்பார்வைக்குழு செயலிழந்து விட்டது. அதைக் காரணம் காட்டி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முட்டுக்கட்டை போடுவதை அனுமதிக்க முடியாது. மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதிக்கவில்லை என்று சித்தராமய்யா கூறுவதும் திரிபு வாதம் தான். உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆணையின் 457&ஆவது பக்கத்தின் 403&ஆவது பத்தியில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கான அமைப்பு 6 வாரங்களில் அமைக்கப்பட வேண்டும்; இதற்காக இனியும் கால நீட்டிப்பு வழங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் மேலாண்மை வாரியம் அமைக்கக் காலக்கெடு விதிக்கப்படவில்லை என்றும், இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைத்து தீர்வு காண வேண்டும் என சித்தராமய்யா கூறிவருவதைப் பார்க்கும் போது அவர் இயல்பாக இல்லை; தேர்தல் காய்ச்சல் பாதித்துள்ளது என்பதை உணர குடிகிறது. இந்த எதிர்ப்புக்கு பணிந்து மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தாமதப்படுத்தக் கூடாது.
 

ஏற்கனவே நான் குறிப்பிட்டதைப் போல உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால் மட்டுமே மேலாண்மை வாரியத்தை அடுத்த 6 வாரங்களில் மத்திய அரசு அமைத்து விடாது என்பதற்கான உதாரணம் தான் சித்தராமய்யாவின் இந்தக் கருத்துகள் ஆகும். கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிக்கை அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள நிலையில், அங்குள்ள மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முட்டுக்கட்டை போட காங்கிரசும், பாரதிய ஜனதாவும் முயலும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழககத்திற்கு நீதி பெற்றுத் தருவதை விட கர்நாடக சட்டப்பேரவைத்  தேர்தலில் அரசியல் அதிகாரத்தை சுவைப்பது தான் அக்கட்சிகளுக்கு அவசரத் தேவையாக இருக்கும்.
 

எனவே, இந்த விஷயத்தில் தமிழகம் இனியும் அலட்சியமாக இருக்கக் கூடாது. மத்திய அரசுக்கு  தொடர்ந்து அழுத்தம் தருவதன் மூலமாக மட்டுமே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும். உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இது குறித்து தீர்மானம் நிறைவேற்றுவதுடன், அனைத்துக் கட்சித் தலைவர்கள், உழவர் அமைப்புகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி வலியுறுத்த முதல்வர் முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்