Skip to main content

ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை..! - உச்சநீதிமன்றம் அதிரடி!

Published on 04/07/2018 | Edited on 04/07/2018


துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை ஆளுநர்தான் பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுத்து வந்தார். இதனால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது. அமைச்சரவை எடுக்கும் எந்த முடிவையும் டெல்லி துணை ஆளுநர் செயல்படுத்த விடுவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார் என்று ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டியது. இதனால், டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என விளக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட்4-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர். அமைச்சரவையின் பரிந்துரைப்படி, ஆலோசனைப்படி அவர் செயல்படலாம் எனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக்பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நடந்தது. இந்த வழக்கில், இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

 

 

இந்தநிலையில், இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், துணைநிலை ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு தனிச்சையாக முடிவு எடுக்க முடியாது. டெல்லி துணைநிலை ஆளுநர் மற்ற மாநிலங்களின் ஆளுநர் போன்றவர் அல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் முடிவுகள் மீது துணைநிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். டெல்லி அரசுக்கு மற்ற மாநிலங்களுக்கு இருப்பது போல அதிகாரங்கள் கிடையாது.

’துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை’. அமைச்சரவையுடன் துணைநிலை ஆளுநர் இணக்கமாக செயல்பட வேண்டும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

மக்கள் நலத்திட்டங்கள் தாமதமானால் பொறுப்பேற்க வேண்டியது ஆளுநரும், அரசும்தான். அரசியல் சாசனத்தை மதிக்கும்படியே நிர்வாகங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்