Skip to main content

ஜோதிமணி எம்.பி.க்கு இழுக்கு ஏற்படுத்த முயன்ற சமூக ஊடக போலிகள்!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

 

ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த வாரம் சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் தன்னுடைய டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் "தெய்வம் நின்று கொல்லும். ஈழத் தமிழர் கதறிய போது இங்கே அதிகார போதையில் அகங்காரமாய் சுற்றிய அத்தனை பேரையும் தெய்வம் நிச்சயம் நின்று கொல்லும்" என்று தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பெயரில் உள்ள ஒரு டுவிட்டர் கணக்கில் இருந்து பதில் கருத்து பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் 'போடா மூட்டாள்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

jothimani congress


இதுதொடர்பாக ஜோதிமணி உடனடியாக டுவிட்டரில் விளக்கமளித்தார். அதில், "சங்கப்பரிவாரங்களின் பெய்டு ட்ரோல்ஸ் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எனது Id க்களை போர்ஜரி செய்யும் பணியைத் துவங்கியிருக்கிறார்கள். பிஜேபியிடம் நிறைய பணம் இருக்கலாம் அதற்காக தமிழ் ஒழுங்காக எழுதக்கூடத் தெரியாதவர்களை பணிக்கு அமர்த்தவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்! என்று தெரிவித்திருந்தார். மேலும் மற்றொரு டுவிட்டில், "நான் சாதரணஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறேன். ஐ போன் பயன்படுத்துவதில்லை. எனது பெயரில் உள்ள பதிவு ஐ போனில் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நான் மற்றவர்கள் பதிவுகளில் கமெண்ட் செய்வதில்லை. அந்தளவிற்கு நேரமும்மில்லை. இவ்வளவு தரம்தாழ்ந்த செயலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை தம்பி. நன்றி" என்று சர்ச்சைக்கு காரணமான பிரசாந்தின் பதிவுக்கு விளக்கமளித்திருந்தார். 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். மேலும், ஜோதிமணியை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "என்னுடைய பெயரில் போலி டுவிட்டர் கணக்கு உருவாக்கப்பட்டு அந்த கமெண்ட் செய்யப்பட்டுள்ளது. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. யாரோ எனக்கு இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய பதிவை இட்டுள்ளனர். அவர்களின் எண்ணம் ஈடேறப்போவதில்லை. இதை எல்லாம் தாண்டிதான் அரசியலில் சாதிக்க வேண்டும். ஆனால், என்னிடம் எந்த கருத்தையும் கேட்காமல் நான் அவரின் பதிவுக்கு பதில் கருத்தை தெரிவித்தது போன்று ஊடகங்களில் செய்தி வெளியானது. ஊடகங்களில் சகஜமாக பேசும் என்னிடம் ஏன் எந்த கருத்தையும் கேட்காமல் செய்தி வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை" என்றார்.
 

கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி தொடர்ந்து சமூக ஊடகங்களில் இயங்கி வருபவர். பொதுமக்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்து வருவதுடன், தொலைக்காட்சிகளில் ஆரோக்கியமான விவாதங்களிலும் பங்கேற்பார். அப்படிப்பட்ட இவருக்கு இழுக்கு ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவே இது தெரிகிறது.