Skip to main content

“பாஜகவின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர்” - கிருத்திகா தரண்

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

 Krithika Tharan Interview

 

ஊட்டச்சத்து நிபுணரும் காங்கிரஸ் ஆதரவாளருமான கிருத்திகா தரண் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பல்வேறு கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

 

அவர் பேசியதாவது: “கர்நாடகாவில் சென்ற முறை பின்வாசல் வழியாக வந்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதை மக்கள் ஆதரிப்பார்கள் என்று நினைத்தது தான் அவர்களின் தப்புக் கணக்கு. பின்வாசல் வழியாக வந்ததால் தான் அவர்களுக்கான ஆதரவு குறைந்தது. டபுள் எஞ்சின் என்று அவர்கள் சொல்வதை மக்கள் டபுள் ஊழல் என்று சொல்கிறார்கள். மத்திய அரசு என்ன அநீதி இழைத்தாலும் அதைத் தட்டிக் கேட்கும் அரசு கர்நாடகாவில் இல்லை. ஜிஎஸ்டி பணம் கூட மத்திய அரசால் சரியான முறையில் தரப்படவில்லை. கர்நாடகாவில் கற்றல் சதவீதமும் குறைந்துள்ளது. 

 

திப்பு சுல்தானை புறக்கணிப்பது, சமஸ்கிருதத்தைத் திணிப்பது என்று பாடத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகளை நிகழ்த்தியுள்ளனர். ஹிஜாப் பிரச்சனையால் பல சிறுபான்மைப் பெண்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொண்டு வந்த முத்தலாக் சட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் உதவாது. இவர்களுடைய சட்டங்கள் எதுவுமே கல்விக்கோ பொருளாதாரத்துக்கோ நாட்டுக்கோ உதவாது. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் நான் பல நாட்கள் கலந்துகொண்டேன். பலதரப்பட்ட மக்களிடம் நாங்கள் அப்போது பேசினோம். பாஜகவின் மீதான அதிருப்தி அப்போது வெளிப்பட்டது.

 

40% கமிஷன் கேட்பதால் கர்நாடகாவில் காண்ட்ராக்டர்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தாலும் பாஜகவின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர். காங்கிரஸ் வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து சட்டங்களையும் பொறுமையாக நிறைவேற்றினர். இன்று கர்நாடகாவில் பால் தட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் இலவசமாகப் பால் வழங்கப் போகிறோம் என்று அறிவிக்கிறது பாஜக. எந்த முன் யோசனையும் இல்லாமல் வெளியிடப்பட்ட அறிவிப்பு இது. 

 

குஜராத்தில் பில்கிஸ் பானோ பாலியல் குற்றவாளிகளை விடுவிக்கிறது பாஜக அரசு. மல்யுத்த வீராங்கனைகள் இன்று நடுரோட்டில் உட்கார்ந்து அழுகின்றனர். பெண்களுக்காக இவர்கள் என்ன செய்தார்கள்? பெண் கல்வி, பெண் பாதுகாப்பு என்று அனைத்தையும் நசுக்குகின்றனர். பெண்களுக்கு ஒரு அச்சத்தை இவர்கள் உருவாக்குகின்றனர். 12 மணி நேர வேலை சட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு. அதுதான் உண்மையான ஜனநாயகம். கர்நாடகாவிலும் அதே சட்டமும் அதற்கான எதிர்ப்பும் இருக்கிறது. மக்களின் குரலை இங்கு யார் காதில் வாங்குகிறார்கள்? காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் நிச்சயம் செவிசாய்க்கும். 

 

பசுவதை தடைச் சட்டத்தால் கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படுகிறது. பாஜகவுக்கு மதத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றுவது மட்டுமே முக்கியம். இவர்கள் அனைத்தையும் மதச்சார்புடனும் சமூகநல கண்ணோட்டம் இல்லாமலுமே அணுகுகின்றனர். இவை அனைத்தையும் மக்கள் உணர்ந்ததால் தான் காங்கிரஸ் கட்சிக்கு இங்கு மிகப்பெரிய ஆதரவு இப்போது இருக்கிறது. எங்களுடைய தலைவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய மக்கள் கூட்டம் திரள்வதே எங்களுக்கான ஆதரவு அலை வீசுவதை உணர்த்துகிறது.”