Skip to main content

மீண்டும் மாணவ மாணவிகளை சந்திக்கும் விஜய்

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
Vijay meets students again

தமிழ்நாட்டில்  2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி (26.03.2024) தொடங்கி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதத் தகுதி பெற்றிருந்தனர். முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு முடிவு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தமிழகம் முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மாணவிகள் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி மாணவிகள் தேர்ச்சி விகிதம் 5.95 சதவிகிதம் அதிகம் ஆகும். 

தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுகு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன். விரைவில் நாம் சந்திப்போம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த வருடம் ஜூன் 17ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதையடுத்து மீண்டும் மாணவ மாணவிகளை சந்திக்கவுள்ளார். இந்த முறை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கவுள்ளதாகவும் ஜூனில் இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்