Skip to main content

பெண் போலீஸ் கொலை வழக்கு; சிறையிலிருந்து தப்பிய சைக்கோ சங்கர் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 34

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

thilagavathi-ips-rtd-thadayam-34 

 

சைக்கோ ஜெய்சங்கரின் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.

 

வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெய்சங்கர் தப்பித்ததால் மனமுடைந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ஜெய்சங்கரை பிடிப்பதற்கு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன. தேடப்படும் குற்றவாளி என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவனைப் பிடித்துத் தரும் மக்களுக்கு பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டன. அவனுடைய மனைவியிடம் விசாரித்தபோது தன்னுடைய கணவர் மிகவும் நல்லவர் என்று சாதித்தார். கர்நாடகாவுக்கு தப்பிச்சென்ற அவன், அங்கும் அதே குற்றங்களில் ஈடுபட்டு வந்தான். ஒருமுறை அவ்வாறு தவறு செய்யும்போது மக்கள் அவனை வளைத்துப் பிடித்தனர். 

 

அவன் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டான். இவன் ஏன் இவ்வாறு செயல்படுகிறான் என்பதை அறிய சிறையில் அவனுக்கு உளவியல் சிகிச்சை வழங்கப்பட்டது. யோகா, தியானம் உள்ளிட்டவற்றை அவனுக்கு கற்றுக்கொடுத்தனர். ஒருமுறை விசாரணைக்காக சென்று திரும்பும்போது உடல்நிலை சரியில்லை என்று அவன் நடித்தான். சிறையில் உள்ள மருத்துவமனையில் அவன் அனுமதிக்கப்பட்டான். ஒருநாள் அவனை சிறையில் காணவில்லை. அவன் அங்கிருந்து தப்பித்தது தெரிந்தது. அவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி அவன் தப்பித்தான் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

அவனைக் கண்டுபிடிக்க தீவிரமான தேடுதல் வேட்டை நடைபெற்றது. பொம்மனஹள்ளி என்கிற பகுதியில் அவன் இருக்கிறான் என்கிற தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அங்கு அவன் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான். தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத அளவுக்கு குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான உந்து சக்தி அவனுக்குள் இருந்தது. இவ்வளவும் செய்த அவனை இடையில் ஒரு நீதிமன்றம் விடுதலை செய்ததுதான் கொடுமையான விஷயம். பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த அவன் மீண்டும் தப்பிக்க முயற்சி செய்தான். 

 

ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் பிளேடால் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு அவன் தற்கொலை செய்துகொண்டான். பல கொடூரங்களைச் செய்த அவனுடைய வாழ்க்கை தற்கொலையில் முடிந்தது. அவனுடைய மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று கூறி அவனுடைய உடலை வாங்க அவரது மனைவி மறுத்தார். அவன் அயோக்கியனாக இருந்ததால் சுடுகாட்டில் கூட அவனுடைய உடலை ஏற்க மறுத்தனர். இறுதியில் மின் மயானத்தில் அவனுடைய உடல் எரியூட்டப்பட்டது. தவறுக்கு மேல் தவறு செய்த அவன் வாழ வேண்டிய வயதில், மூன்று பெண் குழந்தைகளை விட்டுவிட்டு இறந்தான். அவனுடைய மனைவியும் அதன்பிறகு தற்கொலை செய்துகொண்டார் என்கிற தகவல் வந்தது.