Skip to main content

அதிர்ச்சி அளித்த அமெரிக்க டாக்டர் மாப்பிள்ளை - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 08

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

Advocate Santhakumari's Valakku En - 08

 

நிச்சயிக்கப்பட்டு நடக்கும் திருமணங்கள் பல நேரங்களில் பெண்களுக்கு சிக்கல்களை அளிக்கக் கூடியதாக மாறுகின்றன. அதிகம் வெளியே பேசப்படாத தாம்பத்திய உறவில் ஏற்படும் பிரச்சனைகள் குடும்பங்களை அதிகம் பாதிக்கின்றன. அப்படிப்பட்ட சிக்கல் நிறைந்த ஒரு வழக்கு குறித்து நம்மோடு குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து கொள்கிறார்.

 

உஷா நல்ல சூழ்நிலையில் நல்ல படிப்புடன் வளர்ந்த ஒரு பெண். கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாள். அப்போது அமெரிக்காவிலிருந்து அவளுக்கு ஒரு வரன் வந்தது. பையன் ஒரு மருத்துவர் என்பதால் பெற்றோருக்கு சந்தோஷம். அவர் அழகாக இருந்தார். வீடியோ காலில் பேசினார். இருவருக்குமான புரிதல் நன்றாக இருந்தது. எனவே திருமணத்திற்கு சம்மதித்தாள். திருமணம் முடிந்தது. முதலிரவுக்காக அவள் கனவுகளோடு காத்திருந்தாள். உள்ளே வந்தவன் தான் மிகவும் சோர்வாக இருப்பதாகக் கூறி படுக்கச் சென்றான். அடுத்த இரண்டு நாட்களிலும் அவன் தாம்பத்தியத்திற்குத் தயாராக இல்லை. ஏன் என்று விசாரித்தபோது தனக்கு இந்திய கலாச்சாரப்படி தாம்பத்தியத்திற்கு நேரம் குறித்து ஈடுபடுவதில் விருப்பமில்லை என்றும், இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டவுடன் அது நடக்க வேண்டும் என்றும் கூறினான். இவளும் அதைப் புரிந்துகொண்டாள். அவன் அவளோடு அமெரிக்காவுக்குக் கிளம்பினான்.

 

வேலையில் தனக்கு இரவு நேரப் பணி விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினான். பகல் நேரத்திலும் முத்தமிடுவது வரை சென்ற அவன் தாம்பத்திய உறவுக்கு மட்டும் தயாராக இல்லை. அவளுக்கு சந்தேகம் வர ஆரம்பித்தது. அவளால் அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. ஒரு மனநல மருத்துவரை சந்தித்து தனக்கு நடந்த அனைத்தையும் கூறினாள். கணவரை அழைத்து வரச் சொன்னார்கள். பிணக்கூறாய்வுத் துறையில் மருத்துவராக அவளுடைய கணவர் வேலை பார்ப்பது தெரிந்தது. பிணங்களோடு பயணிக்கும் வாழ்க்கை என்பதால் நிர்வாணமான உடலைப் பார்க்கும்போது அவனுக்கு பிணத்தின் ஞாபகம் தான் வந்தது. 

 

மருத்துவரிடம் அழைத்தாலும் அவன் வரவில்லை. மீண்டும் மீண்டும் தாம்பத்தியத்திற்கு அழைத்தாலும் அவன் தயாராக இல்லை. அவளை நிர்வாணமாகப் பார்க்கும்போது பிணத்தைப் பார்ப்பது போல் தான் அவனுக்கு இருந்தது. இதை மருத்துவர்களிடம் சொன்னபோது, அவன் இதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்வதற்குத் தயாராக இல்லை என்றால் இந்த திருமண பந்தத்திலிருந்து வெளியேறுமாறு அவளுக்கு அறிவுரை கூறினர். அங்குள்ள தெற்காசிய அமைப்பு அவளுக்கு உதவ முன் வந்தது. அவர்கள் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அவள் இந்தியாவுக்கு வந்தாள்.

 

இங்கு நாங்கள் அவளுடைய கணவர் மீது இந்தத் திருமணமே செல்லாது என்று வழக்கு போட்டோம். திருமண பந்தத்திற்குத் தகுதியில்லாத நபர் அவர் என்றும், ஏமாற்றித் திருமணம் செய்துவிட்டார் என்றும் வாதிட்டோம். நஷ்ட ஈடும் கேட்டோம். நிரந்தர ஜீவனாம்சம் கேட்டோம். அதன் பிறகு அந்தப் பையன் இங்கு வரவே இல்லை. ஆண்கள் தாங்கள் திருமணத்திற்குத் தகுதியானவர்கள் தானா என்பதை அறிந்துகொண்டு அதன் பிறகு திருமணம் செய்துகொள்ள வேண்டும். கடமைக்குத் திருமணம் செய்துகொண்டு இன்னொருவருடைய வாழ்வைக் கெடுக்கக் கூடாது.