Skip to main content

ஹிட்மேன் ரோஹித்தின் மும்பையா? தல தோனியின் சிஎஸ்கே-வா?

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

சர்வதேச போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் போல, ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்றால் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டி தொடங்கும் முன்பே முன்னாள் வீரர்கள், பிரபலங்கள், சமூக வலைத்தளங்கள், ரசிகர்கள் என பல தரப்பிலும் காரசார விவாதங்களும், ஆதரவுகளும் அனல் பறக்கும். 

 

csk

 

சென்னையை அதிக முறை வென்ற ஒரே அணி மும்பை மட்டுமே. இதுவரை 27 போட்டிகள் விளையாடி மும்பை அணி 15 போட்டிகளில் வெற்றியும், சென்னை அணி 12 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. சென்னை அணி மும்பை அணியுடன் மட்டுமே குறைவான வெற்றிகள் பெற்றுள்ளது. ஐபிஎல் தொடர்களில் மட்டுமல்ல; டி20 வரலாற்றில் உலகளவில் பல சாதனைகளை கொண்டுள்ளதும் இந்த இரு அணிகள்தான்.  
 

சென்னை அணி தன்னுடைய வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே 100 ரன்களுக்கு குறைவாக எடுத்துள்ளது. 2013-ல் 79 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வீழ்ந்தது. இந்த வருடம் சென்னை-மும்பை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் வான்கடே மைதானத்தில் 171 ரன்களை சேஸ் செய்த சென்னை அணி வெறும் 133 ரன்களை மட்டுமே எடுத்தது.
 

ஐபிஎல்லில் மிகச்சிறந்த அணியாக வலம் வருவது சென்னை அணி. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சற்று கடுமையாகவே போராட வேண்டியிருக்கிறது. கடும் சவால்களை கொடுக்கிறது மும்பை. மேலும், இரு முறை ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் சென்னை அணி மும்பையிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளது.
 

சர்மா தலைமையில் இதுவரை ஐபிஎல் தொடரில் 98 போட்டிகளில் 56 போட்டியில் வெற்றி, 57.65 சதவீதம் வெற்றி. தோனி தலைமையில் 169 போட்டிகளில் 102 போட்டியில் வெற்றி, 60.71 சதவீதம் வெற்றி. சென்னை மற்றும் மும்பை அணிகள் இதுவரை தலா மூன்று முறை ஐபிஎல் கோப்பையும், இரு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையும் வென்றுள்ளது. 

   
பெரும்பாலும் ஸ்லொவ் ஸ்டார்ட் அணியாக வலம்வரும் மும்பை அணி, இந்த ஆண்டு சிறப்பான ஒரு தொடக்கத்தை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தியுள்ளது. முதல் 10 போட்டிகளில் 6 வெற்றி பெற்று ஃப்ளேஆப் வாய்ப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ஃப்ளேஆப் சென்று விட்டது சென்னை அணி. 
 

சென்னை அணி மும்பை அணியுடன் சேப்பாக் மைதானத்தில் 6 போட்டிகளில் 2 போட்டியில் சென்னை அணியும், 4 போட்டியில் மும்பை அணியும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் சேப்பாக் மைதானத்தில் சென்னை அணி தோல்வியை கண்டதில்லை என்பது சென்னை அணிக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும். 
 

கடைசி போட்டியில் ஆடுகளம் ஓரளவு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தது. பெரும்பாலும் சேப்பாக் மைதானம் ஸ்பின் பவுலிங்க்கு சாதகமாகவே இருந்து வருகிறது. கடைசியாக நடந்த சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டியில் இரு அணிகளும் 175+ ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

சென்னை அணிக்கு வலுவான ஸ்பின் பவுலிங் யூனிட் இருப்பது சென்னை மைதானத்தில் மும்பை அணிக்கு சற்று சவாலான ஒன்றுதான். மும்பை அணியில் ராகுல் சஹார் தவிர சிறந்த ஸ்பின் பவுலிங் யூனிட் இல்லாதது மும்பைக்கு மைனஸ்.  
 

சென்னை அணியில் தொடக்க வீரர்களான வாட்சன் மற்றும் டுபிளெஸிஸ் ஜோடி நல்ல தொடக்கத்தை தரவேண்டியது சென்னைக்கு மிகவும் அவசியம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஃபார்முக்கு திரும்பியுள்ளார் வாட்சன். 

 

watson

 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரெய்னா, ராயுடு, ஜாதவ் ஆகியோர் பெரியளவு ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகின்றனர். இருந்த போதிலும் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகின்றனர். தோனி சிறந்த ஃபார்மில் அணிக்கு ஃபினிஷராகவும், இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் சிறப்பாகவும் விளையாடி வருகிறார்.  
 

ஆல்ரவுண்டர்கள் பிராவோ, ஜடேஜா ஆகியோர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அணியின் தேவைக்கு ஏற்றவாறு விளையாடி வருகின்றனர். டெத் ஓவர்களில் பிராவோ மிரட்டலாக பந்துவீசி வருகிறார். 
 

தீபக் சஹார், ஹர்பஜன் சிங் பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசுகின்றனர். அதே போல இம்ரான் தாஹிர் மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு சிறப்பாக செயல்படுகிறார். 
 

ரோஹித் சர்மா மற்றும் குவின்டன் டி காக் ஆகியோர் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கவுள்ளனர். டி காக் இந்த தொடரில் சிறப்பான தொடக்கத்தை மும்பை அணிக்கு அளித்து வருகிறார்.  
 

சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், போலார்ட், குருணல் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டர் வரிசையில் ஓரளவு விளையாடி வருகின்றனர். ஹார்திக் பாண்டியா ஃபினிசிங்கில் கலக்கி வருகிறார்.   
 

pollard

 

ராகுல் சாஹர், ஜாஸ்ப்ரிட் பும்ரா மற்றும் லசித் மலிங்கா ஆகியோர் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சென்னை அணி மும்பையில் அடைந்த தோல்வியை சரி செய்யும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. 
 

சென்னை அணியின் பலம்:

 
சிறப்பான ஸ்பின் பவுலிங் யூனிட், பிராவோவின் அசத்தல் டெத் பவுலிங், பவர் ப்ளே ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தும் அளவில் சிறந்த பவுலர்கள் என பந்துவீச்சில் சென்னை அணி கலக்கி வருகிறது. அதேபோல டுபிளெஸிஸ், பிராவோ, ஜடேஜாவின் ஃபீல்டிங், தோனியின் ஃபினிசிங் என சென்னை அணியின் பலம் உள்ளது. 

 

பலவீனம்:
 

பிராவோவை தவிர வேறு சிறந்த டெத் பவுலர்கள் இல்லாதது, மிடில் ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பி வருவது ஆகியவை சென்னை அணிக்கு சற்று பலவீனமாக அமைந்துள்ளது. 

 

மும்பை அணியின் பலம்:
 

சிறப்பான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட், நல்ல ஒப்பன்னிங் ஜோடி, சிறந்த ஹிட்டர்கள் என மும்பை அணி பலமாக உள்ளது. 
 

பலவீனம்:

 

அதேசமயம் பலமான  ஸ்பின் பவுலிங் யூனிட் இல்லாதது, குருணல் பாண்டியா ஃபார்ம் இல்லாமல் தவிப்பது, மிடில் ஓவர்களில் பேட்டிங்கில் குறைவான ரன் ரேட்டில் விளையாடுவது என மும்பை அணிக்கு சரிசெய்ய வேண்டிய பிரச்சனைகள் உண்டு.    
    


உத்தேச அணி:
 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: 
 

வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், ரெய்னா, ராயுடு, ஜாதவ், டோனி, பிராவோ,  ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.

 

மும்பை இந்தியன்ஸ் அணி: 
 

டி காக், சர்மா, சூர்யகுமார் யாதவ், போலார்ட், குருணல் பாண்டியா, ஹார்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ், இஷான் கிஷன், மயான்க் மார்க்கண்டே, ராகுல் சாஹர், பும்ரா, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், பென் கட்டிங், மலிங்கா.