Skip to main content

“நான் ஏன் கவிதையைக் கைவிட்டேன்?” - எழுத்தாளர் சோ.தருமன் நேர்காணல்

Published on 26/04/2021 | Edited on 26/04/2021
writer cho dharman interview

 

சோ.தருமன்-

 

தனது அப்பட்டமான அதிரடி எழுத்துகளால் தமிழிலக்கியத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர். விவசாயம் சார்ந்த குடும்பத்தில் இருந்து வந்த இவர் கரிசல் இலக்கியத்தின் மூலம் தனது தனித் துவமான படைப்புகளால் எழுந்து நிற்கிறார். இவரது சிறுகதைகளும், புதினங்களும் அடித்தட்டு மக்களுக்காக, அவர்களையே பேசுகின்றன. சமூகநீதிக்கான குரலாக, ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்கான வாதடலாக இவரது எழுத்துகள் இயங்கிவருவது பெருமைக்குரியது. பல்வேறு விருதுகளால் சிறப்பிக்கப்பட்ட தருமனின் ’சூல்’ நாவல், சாகித்ய அகாடமி விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோரின் திருப்புதல்வராக தூத்துக்குடி மாவட்டம் உருளைகுடி எனும் சிற்றூரில் 1953 ஆகஸ்ட் 8-ல் பிறந்த தருமன், இலக்கோடும் பொறுப் புணர்வோடும் எழுதிவருகிறார். அதனால் அவர் எழுத்துக்களில் மனிதம் நிரம்பிவழிகிறது. அவரை நம் இனிய உதயத்துக்காக சந்தித்தபோது...

 

விவசாயக் குடும்பத்தில் பிறந்த நீங்கள், எப்படி இலக்கிய விவசாயியாக மாறினீர்கள்?

 

நல்ல கேள்வி. நான் தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அருகே இருக்கும் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன். எங்கள் கிராமமே விவசாயத்தை நம்பியிருக்கும் கிராமம். நான் இப்போதும் ஒரு விவசாயிதான். எங்கள் குடும்பத்தின் வேர் என்றால் அது விவசாயம் தான். எங்களுடைய பாட்டன், தாத்தா, அப்பா, நான் என எல்லோருக்குமே ஆதாரமாக இருந்ததும், இருப்பதும், அதுதான். எனக்கும் 10 ஏக்கர் கரிசல் காடு உள்ளது. அந்ததக் காலத்தில் கிராமங்களில் எந்தவித பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்காது. அப்போது நாட்டுப்புறக் கூத்துக்கள் மட்டும்தான் இருந்துச்சு. நான்கு அல்லது ஐந்து கிலோ மீட்டர் தள்ளி உள்ள ஊர்களில் ஏதேனும் கூத்து என்று கேள்விப்பட்டால், எங்கள் கிராம மக்கள் அதைப் பார்க்கக் கிளம்பிப் போய் விடுவார்கள். கூத்து பார்த்து விட்டு நடுச்சாமத்தில்தான் எங்கள் கிராமத்திற்கு திரும்புவார்கள். இதில் எங்க அய்யாவும் ஒரு நாட்டுப்புற கலைஞர் என்பதால், அதையெல்லாம் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு எனக்கு என் 13 வயசு வரை கிடைச்சிது. .

 

அதுக்குப் பிறகு எனக்கு மனசில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அதை நிரப்புறதுக்குதான் நான் வாசிக்க ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடத்தைக் கட் அடிச்சிட்டு நான் லைப்ரரிக்குப் போய்டுவேன். இப்படித்தான் வாசிக்கும் பழக்கம் வந்துது. என் தாய்மாமாவான எழுத்தாளர் பூமணியின் வீட்டுக்கு அதிகமா போவேன்.

 

அங்கு நிறைய புத்தகங்கள் இருக்கும். நான் பார்காத, தெரிந்திடாத புத்தகங்களெல்லாம் அங்கு இருக்கும். அதை எல்லாம் எடுத்து வந்து வாசிப்பேன். அந்தப் புத்தகங்கள்தான் என்னை செதுக்குச்சு. அந்த தீராத வாசிப்புதான் என்னை எழுத்துத் துறைக்கு கொண்டு வந்துச்சு.

 

எனக்கு கிடைச்ச வாய்ப்புகளை நான் நல்லா பயன்படுத்திக் கிட்டேன். விவசாயக் குடும்பத்தில் பிறந்த விவசாயியான நானும், எழுத்து விவசாயி ஆகிவிட்டேன்.

 

உங்கள் தந்தையார் நாட்டுப் புறக் கூத்தில் நடிப்பார் என்று சொன்னீர்களே?

 

ஆமாம். என் தந்தை பிரபலமான கூத்துக் கலைஞர். கும்மிக்கூத்துக் கலைஞரா அவர் இருந்தார். ராமாயணக் கூத்தெல்லாம் அப்ப நிறைய நடக்கும். எங்க அய்யாதான் அதில் ஹீரோ. ராமர் வேசம் கட்டி ஆடுவார். அப்ப ராமர், சீதை, லட்சுமணன், மாரீசன், பரசுராமன் வேசமெல்லாம் கட்டிக்கிட்டு கூத்துக் கலைஞர்கள் எல்லோரும் ஆடிப் பாடி நடிப்பாங்க. அதை எல்லாம் ரசிச்சிப் பார்ப்பேன். ஒரு கட்டத்தோடு, இதெல்லாம் முடிஞ்சிப்போயிடுச்சி. அதுல எனக்குப் பெரும் வருத்தம். ஆனாலும் நான் வாசிக்கும் பழக்கத்தால் எழுத்தாளர் ஆயிட்டேன். என் மாமா பூமணி எழுத்தாளராக இருந்ததும், எங்களுக்கு அருகிலேயே கி.ரா இருந்ததும், எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். சிறுகதைகள் எழுதுவதற்கு முன் நான் கவிஞனாகவும் இருந்தவன். கணையாழி, தீபம் போன்ற இதழ்களில் எனது கவிதைகள் வந்துள்ளன.

 

கவிதையை எதற்காகக் கைவிட்டீர்கள்?

 

கவிதையில் சொல்வதைவிட சிறுகதையில் நாம் நிறையச் சொல்லலாம் என்று தோன்றியதால், . கவிதைகளை விட்டுவிட்டு, சிறுகதைகள் எழுத வேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன். உரைநடைக்குள் போனதால் எனக்கு விசாலமான இடம் கிடைத்தது. மதுரையிலிருந்து வெளியான ""மகாநதி"" எனும் பத்திரிகையை கவிஞர் பரிணாமன் மற்றும் மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்த தி.சு. நடராஜன் இருவரும் நடத்தினார்கள். அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக கவிஞர் பரிணாமன் இருந்தார். என் முதல் சிறுகதை 1980 ஆம் ஆண்டில் நான் எழுதிய சிறுகதையான ’விறுவு’ மகாநதியில் வெளியானது. அதன் பின் நான் கவிதை எழுத விரும்பவில்லை. சிறுகதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

 

நேர்காணல் : வீரசோழன் க.சோ.திருமாவளவன்