Skip to main content

தாயின் தலையை வெட்டிய மகன்; களை கட்டும் சிரசு திருவிழா!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Sirasu festival in Vellore district

புராண காலத்தில் தந்தை சொல்லை தட்டாத பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி பின் வரம்பெற்று மீண்டும் உயிர்பித்த நிகழ்வு சிரசு திருவிழாவாக கொண்டாப்படுகிறது.

முன்னொரு காலத்தில் விதர்ப தேசத்தை ஆண்டுவந்த விஜரவத என்ற அரசன் குழந்தை வரம் வேண்டி பிரம்மனை நோக்கிக் கடும் தவமிருந்தார். அரசனின் தவத்தை மெச்சிய பிரம்மன், ரேணுகா தேவியை மகளாகப் பெற்றெடுக்கும் பாக்கியத்தை அருளினார். பின்னர் ரேணுகா தேவிக்கும் ஜமதக்கனி முனிவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 4 ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.

ரேணுகா தேவி ஒருநாள் தாமரை குளம் சென்று நீராடிவிட்டு, மண்ணால் ஆன குடத்தை வழக்கம்போல செய்ய முயன்றும் முடியவில்லை. கந்தர்வ உருவத்தால் மெய் மறந்துப்போனார். நீண்டநேரமாகியும் மனைவி வராததால் நடந்ததை தனது ஞான கண்ணால் அறிந்த முனிவர் ஜமதக்கனி, மனைவி கற்பு தவறியதால் அவரின் தலையை வெட்ட தனது 4 மகன்களுக்கு உத்தரவிடுகிறார். அதில் மூன்று மகன்கள் தாயின் மீது உள்ள பாசத்தால் இதை மறுத்துவிட்டனர்,  நான்காவது மகன் தந்தை சொல்லை தட்டாமல் தனது தாயின் தலையை வெட்ட செல்கிறார். இதனை அறிந்த ரேணுகாதேவி ஓடிச் சென்று அருகே இருந்த இடுகாட்டில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைகிறார். அவரை வெட்ட நான்காவது மகன் முயற்சித்த போது இதனை தடுக்க குறுக்கே வந்த வெட்டியானின் மனைவியின் தலையையும் பரசுராமன் வெட்டி விடுகிறார்.

தனது தாயின் தலையோடு தந்தை ஜமதக்கனி முனிவரை சென்று சந்திக்கிறார் மகன் பரசுராமன். தனது சொல்லை நிறைவேற்றிய மகனை பாராட்டிய முனிவர் ஜமதக்கனி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்கிறார். அதற்கு தனது தாய் மீண்டும் உயிரோடு வேண்டும் என வரம் கேட்கிறார் மகன் பரசுராமன். அந்த வரத்தை முனிவர் ஜமதக்கனி அளிக்கவே மிக வேகமாக சென்று அவசரத்தில் வெட்டியானின் வீட்டில் கிடந்த இரண்டு உடல்களில் வெட்டியானின் மனைவி உடலில் ரேணுகா தேவியின் தலையையும், தாய் ரேணுகா தேவியின் உடலில் வெட்டியானின் மனைவி தலையையும் என மாற்றி மாற்றி தலையை பொறுத்து விடுகிறார் பரசுராமன். இருவரும் உயிர் பெறுகிறார்கள். இத்தகைய நிகழ்வு வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான விழா கடந்த மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள தாளம் முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Sirasu festival in Vellore district

மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சிரசு நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக சென்ற ஊர்வலம் கெங்கையம்மன் கோயில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

இவ்விழாவில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதையொட்டி, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 1,500  போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

விழாவையொட்டி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. குடியாத்தம் அம்மன் சிரசு திருவிழாவையொட்டி வேலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற முதுமொழியை நினைவு கூறும் வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டல்ய மகா நதி கரையோரம் நடத்தப்படும் இந்த சிரசு திருவிழா குடியாத்தம் மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடாகா மற்றும் கேரளா பகுதிகளிலிருந்து சுமார் 1 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் கோடைகால திருவிழா ஆகும்.