Skip to main content

திருநாவுக்கரசரா? அவரைப்பற்றி பேச ஒன்றுமே இல்லை.... - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி

Published on 05/02/2019 | Edited on 05/02/2019
ev

கடந்த 30ந் தேதி மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் சிலையை ஈரோட்டில் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவுக்குப் பிறகு இன்று ஈரோடு வந்த தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துச்சாமி மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:  தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுக்க கலைஞர் கருணாநிதியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். வருகிற பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள  திமுக., காங்கிரஸ் கூட்டணி தயாராக வலுவாக உள்ளது. இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. ஒட்டு மொத்த மக்களும் மோடியையும், எடப்பாடியையும் விரட்டுவதற்கு தயாராக உள்ளார்கள்.  அதிமுக என்கிற அந்த கம்பெனி யாருடன்கூட்டணி அமைத்து  போட்டியிட்டாலும் சரி, இல்லை தனித்து போட்டியிட்டாலும் சரி படுதோல்வி என்பது  உறுதி. மே மாதத்திற்கு பிறகு அ.தி.மு.க. என்கிற கொள்ளை கூடார கம்பெனி இருக்காது இருக்கும் எங்கே என்றால் அது அனேகமாக தனி சிறையாக இருக்கலாம்.  

 


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அழகிரி தேர்ந்தெடுக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். அவர் மூத்த தலைவரான காமராஜர் காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சிக்காக பாடுபட்டு வந்தவர்.

 

 தேர்தலில்தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக -பாஜக கூட்டணிக்கு எங்குமே டெபாசிட் கூட கிடைக்காது. தேர்தல் பிரச்சாரத்திற்காக  மோடி, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் கூட்டம் நடத்தினாலும், மொடக்குறிச்சியில்  நடத்தினாலும் சரி, இந்த கொங்கு மண்டலத்தில்  திமுக-காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும்.


மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி மோடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அவரின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.   முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் பற்றி  பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவர் இரண்டு ஆண்டு காலம் தமிழக   காங்கிரஸ்  தலைவராக இருந்ததே ஒரு வகையில் சாதனை தான்.