Skip to main content

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? 

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
publication of list of most corrupt countries released by transparency international

உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வருடந்தோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலை, நிர்வாக வெளிப்படைத்தன்மை, லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றை காரணிகளாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உலகில் உள்ள 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வரிசைப்படுத்துகிறது. 

அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 100க்கு 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 100க்கு 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது. மேலும், ஊழலுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு இந்த அமைப்பு புள்ளிகள் வழங்குகிறது.

இந்த பட்டியலில், 100க்கு 90 புள்ளிகள் பெற்ற டென்மார்க், குறைந்த அளவு ஊழல் கொண்ட நாடாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், 87 புள்ளிகள் பெற்று பின்லாந்து 2வது இடத்தையும், 85 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து 3வது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியா 39 புள்ளிகள் பெற்று 93வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 40 புள்ளிகள் பெற்று 85வது இடத்தில் இருந்த இந்தியா, 2023 ஆம் ஆண்டு பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோன்று, கஜகஸ்தான், லெசொத்தோ, மாலத்தீவு ஆகிய நாடுகளும் 39 புள்ளிகளுடன் இந்தியாவுடன் 93 இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 

இப்பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 29 புள்ளிகள் பெற்று 133வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா 76வது இடத்தையும், இலங்கை 34 புள்ளிகள் பெற்று 115வது இடத்தையும் பிடித்துள்ளன. 11 புள்ளிகள் பெற்று, அதிக அளவில் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்தில் (180வது) உள்ளது.

சார்ந்த செய்திகள்