Skip to main content

நக்கீரன் ஆசிரியர் கைது; கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை வெட்டவெளிச்சமாகிறது;புதிய நாளிதழ் கண்டனம்

Published on 09/10/2018 | Edited on 09/10/2018

நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரும், தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளருமான நக்கீரன் கோபால் அவர்கள் இன்று காலை கைது போலீசாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து பல்வேறு கட்சி தலைவர்கள் இந்த கைதிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறன்றனர். இந்த கைது குறித்து  புதிய நாளிதழ் ஆசிரியர் குழு ந.ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

nakkheerean gopal

 

 

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது. துணைவேந்தர் பதவியில் தொடங்கி உதவிப் பேராசிரியர் பணி வரை அனைத்து பணியிடங்களும் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. துணைவேந்தர் பதவி ரூ.5 கோடி முதல் ரூ.60 கோடி வரை விற்பனை செய்யப்படுவதை பல சமூக இயக்கங்களும் கட்சிகளும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராக தகுதியே இல்லாத செல்லத்துரை நியமிக்கப்பட்டதையும், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை கணபதி பணம் கொடுத்து கைப்பற்றியதையும் பா.ம.க. தான் அம்பலப்படுத்தியது. செல்லத்துரை சென்னை உயர்நீதிமன்றத் தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாரதியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கணபதி கையூட்டு வாங்கியதாக கைது செய்யப்பட்டு  நீக்கப்பட்டார். நிலமை இப்படியிருக்க துணைவேந்தர் நியமனங்களில் ஊழல் நடந்துள்ளது உண்மை என ஆளுனர் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது. 

 

நடைபெற்ற முறைகேட்டிற்கு  காரணமானவர்களை தண்டிக்கவும் துரிதமாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடாமல் பொதுமேடையில் பேசியதன் அடிப்படை என்னவென்று தெரியவில்லை. மேலும் நிர்மலா தேவி விவகாரம் கிட்டதட்ட ஒரு ஆண்டுகள் வரை நடைபெற்ற விசாரணை விவரம் என்னவென்று தெரியவில்லை. காலம் தாழ்த்துவதைப் பார்த்தால் சாட்சிகளையும் ஆதாரங்களை அழிப்பதுபோலவும் நிர்மலாதேவி உயிருக்கு ஆபத்தான சூழல் இருப்பது போலல்லவா இருக்கிறது.

 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பாஸ்கரன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன், அன்னை தெரசா பல்கலைக் கழக துணைவேந்தர் வள்ளி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி உள்ளிட்ட இப்போது பதவியிலுள்ள 8 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து புலனாய்வுதுறை விசாரணை நடத்த வேண்டும்.

 

துணை வேந்தர்கள் நியமனத்துக்கு கவர்னர்தான் ஒப்புதல் வழங்கவேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில்தான் பணம் வாங்கி இருக்கவேண்டும் என்றுசொல்ல வருவதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த நடைமுறை 20 வருடமாகவே தொடங்கி விட்டதை புரிந்துகொள்ளாமல் அப்பாவியாக இருக்கிறார் கவர்னர். இப்படிப்பட்ட அப்பாவிதான் கடந்த ஆண்டு பாமக கட்சி 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய மாபொரும் ஊழல் புகார் மனு குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க பரிந்துரைக்கவில்லை. மேலும் திமுக தரப்பில் அளிக்கப்பட்ட எந்த புகாரின் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 

 

தமிழக பல்கலைக்கழகங்களில் பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் இப்போதும் ஊழல் நடைபெற்று வருகிறது. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டதற்கு ஆளுநர் புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு நக்கீரன் கோபால் கைது செய்ய ஆளுநர் பணித்திருப்பது என்பது அடக்குமுறையின் உச்சம். எந்த மீடியாக்களும் நிர்மலாதேவி விவகாரத்தை ஆழமாக அணுகவில்லை. அதன் பின்னால் இருக்கும் குற்றவாளிகளையும் இளம் பெண்களை பாலியலுக்கு பயன்படுத்திய விஜபிக்கள் குறித்து தகவல் சேகரிக்கும் பணியை சரிவர மேற்கொள்ளவில்லை. இப்படி விஜபிக்கள் கூட்டாக அனைத்தையும் அதிகாரத்தையும் வளைத்து தப்பிக்கும் போக்கு தொடர்வதோடு திருமுருகன் காந்தி, முகிலன் போன்றறோர் வரிசையில் ஆட்சியாளர்களால் இன்றைக்கு தொடர்ந்து பத்திரிகையாளர்களை கைது செய்து வந்த காவல்துறை உச்சபட்சமாக இன்றைக்கு நக்கீரன் கோபாலை கைது செய்திருப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஊடக மற்றும் பத்திரிகையாளர்களை அடக்கும் வேலையில் ஈடுபட்டு வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. 

 

மத்திய மாநில அரசுகளின் கைது நடவடிக்கைகளை கண்டிப்பதோடு நிர்லாதேவி விவகாரத்தில் ஆளுநர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிசிடி வைத்து விசாரணை நடத்தவும் அனைவரையும் தீவிரமாக விசாரணை  வளையத்தில் கொண்டு வரவும் இந்த விவகாரத்தில் கிடைத்த தகவல்களை மீடியாக்களிடம் தெரியப்படுத்தவும் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

 

ஜனநாயக மாண்பை காப்பாற்றவும் பத்திரிகை சுதந்திரத்தை பேணவும் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்கும் முடிவை கைவிட்டு உடனே விசாரணை செய்து திரும்ப வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் எனக்கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்