Skip to main content

திண்டுக்கல்: கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்!

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

கல்குவாரி

 

வத்தலக்குண்டு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

திண்டுக்கல்  மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் மல்லனம்பட்டி கிராமத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல் குவாரியால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதோடு வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து  கல்குவாரி பணிகள் நிறுத்தப்பட்டன.

 

இந்நிலையில் மீண்டும் கல் குவாரியைச் செயல்படுத்தவும் அப்பகுதியில் மேலும் புதிய கல்குவாரி அமைப்பதற்கும் நிலங்களை அளவு செய்யும் பணியில் வத்தலக்குண்டு வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு திரண்டு மல்லனம்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர்  மீண்டும் கல்குவாரி தொடங்க அனுமதிக்கக் கூடாது என்றும் புதிய கல் குவாரி அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

ஆனால் அதிகாரிகள் இதனைக் கண்டுகொள்ளாமல் நில அளவைப் பணியில் ஈடுபட்டதால் அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

 

கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

 

மல்லனம்பட்டி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டத்தில் கல்குவாரி தேவையில்லை எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்  கல்குவாரி திறப்பதை மாவட்ட நிர்வாகம் நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் கூறினர்.

 

 

சார்ந்த செய்திகள்