Skip to main content

மத்திய அமைச்சர் முன்னிலையில்  காங்கிரஸ் - பாஜகவினர் இடையே கைகலப்பு!

Published on 15/07/2018 | Edited on 15/07/2018
pon


சேலத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோது காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையிலேயே கைகலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

காமராஜர் பிறந்த நாளையொட்டி சேலம் ஆனந்த பாலம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் இன்று (ஜூலை 15, 2018) காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்திருந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

c a

 

இதற்காக காமராஜர் சிலையை சுற்றியுள்ள தடுப்புக் கம்பிகளில் அக்கட்சி நிர்வாகிகள் பாஜக காவிக்கொடியை கட்டினர். அந்த நேரத்தில், சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அங்கு வந்தனர். 

 

சிலையைச் சுற்றிலும் கம்பிகளில் பாஜக காவிக்கொடி கட்டியிருப்பதைப் பார்த்த அவர்கள் கொதிப்படைந்தனர். உடனடியாக கொடிகளை அவிழ்த்து அப்புறப்படுத்தும்படி கூறினர். இதைக் கேட்ட பாஜக நிர்வாகிகள், கொடிகளை அவிழ்க்க முடியாது என்று பதிலடி கொடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 


இதற்கிடையே காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரில் நிகழ்விடம் வந்து சேர்ந்தார். அவர் வந்த பிறகும் காங்கிரசாரும், பாஜகவினரும் கடுமையாக வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று கூட்டத்தில் ஒரு கல் பறந்து வந்து விழுந்தது. அந்தக் கல் சிலை மீது பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் மேலும் கோபம் அடைந்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே திடீரென்று கைகலப்பும் ஏற்பட்டது. 

 

c b

 

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவினரை சமாதானப்படுத்தினார். சேலம் டவுன் காவல்துறையினரும் வந்து, அவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ''தடுப்புக்கம்பிகளில் கட்டப்பட்டுள்ள பாஜக கொடியை அவிழ்த்து வேறிடத்தில் கட்டும்படிதான் கூறினோம். அதற்கு அவர்கள் மறுத்ததால்தான் வாக்குவாதம் ஏற்பட்டது,'' என்றனர்.

 

இதையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் தன் கட்சியினரிடம் கொடிகளை அவிழ்த்து வேறு இடத்தில் கட்டும்படி கூறினார். அவர்களும் உடனடியாக கொடிகளை அவிழ்த்து அப்புறப்படுத்தினர். இதன்பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியினரும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இந்த சம்பவத்தால் நிகழ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 
 

சார்ந்த செய்திகள்