Skip to main content

முதல்வர் தலைமையில் ஆலோசனை; விரைவில் வெளியாகும் அறிவிப்புகள்?

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Counseling headed by the chief minister; Any upcoming announcements?

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் கடந்த 11/05/2024 அன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருந்தது. 

இந்தக் கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர், சட்ட ஒழுங்கு பிரிவு ஏடிஜிபி உள்ளிட்ட பலரும் ஆலோசனையில் பங்கேற்றிருந்தனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் தொடர்பான செய்திகள் பரவலாகி வரும் நிலையில் போதைப்பொருள் புழக்கத்தோடு மட்டுமல்லாமல் அதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்து விட்டதாக எதிர்க்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். சில இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தும்  நபர்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளும் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் 11/05/2024 அன்று தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து  இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர். ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அடிப்படையில் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்