Skip to main content

பல்சரில் இருந்த சாக்கு மூட்டை; பிரித்து பார்த்த போலீஸ் - நாகையில் பரபரப்பு

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
cannabis smugglers on bikes arrested

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆழியூர் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, போலீசார் லைசன்ஸ், ஹெல்மெட் குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருவதாக பலரும் பதறியபடியே வந்தனர். இருப்பினும், சோதனையில் தீவிரம் காட்டிய போலீசார். அனைத்து வாகனங்களையும் சல்லடை போட்டு அலசியுள்ளனர்.

அப்போது பல்சர் பைக்கில் இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை வழக்கபோல தடுத்து நிறுத்திய போலீசார் சோதனையில் இறங்கியுள்ளனர். ஆனால், தொடக்கம் முதலே அந்த இளைஞர்களின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துமாறு இருந்துள்ளது. இதனால், தம்பி வண்டியை ஓரங்கட்டு எனக் கூறிய போலீசார், அவர்களை தப்பிவிடாமல் லாக் செய்துள்ளனர். பின்னர், தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர். அப்போது, அவர்களிடம் இருந்த சாக்குமூட்டையைப் பிரித்து பார்த்துள்ளனர்.  அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது. இதையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாணையில் இறங்கியுள்ளனர். கஞ்சா கடத்தி வந்த இளைஞர்களில் ஒருவர் நாகை பெரியதும்பூர் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பதும் மற்றொருவர் அவரது நண்பரான வளவன் ராஜ் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து கடத்தலில் ஈடுப்பட்ட இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 8 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருச்சக்கர வாகனத்தை அதிரடியாக பறிமுதல் செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட, வேதாரண்யம் அருகே நாலுவேதபதி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 364 கிலோ எடை கொண்ட கஞ்சா போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் மூன்று பெரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல, ஆம்புலன்ஸில் வைத்து கஞ்சா கடத்த முயன்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது.

தொடர்ந்து போலீசார் தீவிர விழிப்புடன் இருந்து இதுபோன்ற கஞ்சா கடத்தல் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதால், ஓரளவுக்கு நிலைமை கைக்குள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், போலீசார் இன்னும் சோதனையை அதிகரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது.

சார்ந்த செய்திகள்