Skip to main content

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்