Skip to main content

“எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும்..” சூரியாவுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்..! 

Published on 08/07/2021 | Edited on 08/07/2021

 

NTK Seeman support Actor Surya


மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது. இதற்கு, திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது, கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துவருகின்றனர்.  

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத்தெரிவித்ததற்காக தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

 

அந்த அறிக்கையில் அவர், “இந்தியா அரசியலமைப்புச்சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், இந்நாடு கொண்டிருக்கும் பன்மைத்துவப் பண்பிற்கு முரணாகவும் ஒற்றைமயமாக்கலையும், அதிகாரக்குவிப்பையும் செய்து வரும் பாஜக அரசின் கொடுங்கோல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட்டிருக்கிற கறுப்புச்சட்டமான ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்தை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்த அன்புத்தம்பி சூர்யா அவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு செயல்பட்டு வரும் பாஜகவின் செயல்பாடு வன்மையான கண்டனத்திற்குரியது.

 

திரைக்கலைஞர்கள் சமூகத்தின் ஓர் அங்கம்தான். அவர்களும் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் குரலெழுப்ப வேண்டுமெனும் தார்மீகப் பொறுப்புணர்ந்து அநீதிக்கெதிரான தனது அறச்சீற்றத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் தம்பி சூர்யாவின் நெஞ்சுரமும், துணிவும் போற்றுதற்குரியது; கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிற இச்சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும், அதனுள்ளிருக்கும் பெரும் ஆபத்தினையும், உள் அரசியலையும் உணர்ந்து தனது ஆழ்மனக் குமுறலை வெளிப்படுத்தியிருப்பது மிக நேர்மையானது. அதனை உளப்பூர்வமாக வரவேற்கிறேன். அவரது இந்நிலைப்பாட்டுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்குமென உறுதியளிக்கிறேன்.

 

அறிவியலுக்கும், அறிவுக்கும் அப்பாலான கற்பனை உலகத்தில் வாழ்ந்து, கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, அடக்குமுறையை ஏவுவதும், தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், ஆபாசமாகப் பேசுவதும், சமூக விரோதி, தேசத்துரோகியென முத்திரை குத்தி ஒடுக்குவதுமென சனநாயக விரோதங்களை அரங்கேற்றி வரும் பாஜக, தம்பி சூர்யாவை ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து விவாதிக்க அழைப்பது கேலிக்கூத்தானது. தம்பி சூர்யாவை விவாதத்திற்கு அழைக்கும் பாஜகவின் தலைவர் பெருமக்களை, ஒரே மேடையில் விவாதிக்க நானும் அழைக்கிறேன்; பாஜகவின் ஆட்சிமுறை குறித்தும், அவர்கள் முன்வைக்கிற திட்டங்கள் குறித்தும், கொண்டுவருகிற சட்டங்கள் குறித்தும், பொருளாதாரக்கொள்கைகள் குறித்தும், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கிற ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்தும் வாதிட தர்க்கரீதியிலான கருத்தியல் சண்டைக்கு அறைகூவல் விடுக்கிறேன். என்னோடும், என் தம்பிகளோடும் விவாதிக்கத் தயாரா? எங்களை எதிர்கொள்ளத் துளியளவாவது துணிவிருக்கிறதா? எங்களைத் தாண்டித்தான் தம்பி சூர்யாவை நெருங்க முடியும். தம்பி சூர்யா தனியொரு நபரென நினைத்துக் கொண்டு, மத்தியில் இருக்கும் அதிகாரப்பின்புலத்தைக் கொண்டு அவரை அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் அது மோசமான எதிர்விளைவுகளைத் தருமென எச்சரிக்கிறேன்” என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்