Skip to main content

வெறும் 6 தொகுதிதானா?- விசிகவினர் ஆர்ப்பாட்டம் 

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

Just 6 seats for vck ? - vck struggle

 

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, 15 இடங்கள் கேட்டு விருப்ப பட்டியலைக் கொடுத்துள்ளதாகவும், அதில் 9 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என விசிக கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில், திமுக 5 தொகுதிகளைத் தர முன் வந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு இழுபறி தொடர்பாக விசிக உடன் இன்று (04.03.2021) திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது. இரட்டை இலக்க தொகுதிகளை விசிக கேட்டுவருவதால், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Just 6 seats for vck ? - vck struggle

 

இன்று திமுக - விசிக இடையே பேச்சுவார்த்தை நடப்பதால், விசிக நிர்வாகிகள் காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில் விசிக தலைவர் திருவமாவளவன் பங்கேற்றார். இந்நிலையில் திமுக 6 தொகுதிகளை விசிகவிற்கு ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், திமுக வெறும் 6 தொகுதிகளை ஒதுக்கினால் ஏற்கக்கூடாது என விசிகவினர் முழக்கமிட்டு சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

 

பிறகு அங்கு வந்த விசிக தலைவர் திருமாவளவன், “அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டுதான் முடிவு எடுக்கப்படும். சில நேரங்களில் மனஉளைச்சல் ஏற்படும் சூழல் அமையலாம். ஆனால் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் நாம் பயணிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. எனவே தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். யாரும் எந்தக் கோஷமும் போடக்கூடாது, பிரச்சனை செய்யக் கூடாது'' என்று கூறினார். 

 

தற்போது திருமாவளவன் அண்ணா அறிவாலயம் புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்