Skip to main content

இஸ்ரேலில் சிக்கிய 27 இந்தியர்கள் மீட்பு!

Published on 08/10/2023 | Edited on 08/10/2023

 

Rescue of 27 Indians trapped in Israel

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

 

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் நேற்று 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தி இருந்தனர். ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

 

இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் போர் சூழல் உருவாகியுள்ளதாகவும், போருக்குத் தயார் என்றும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு வழிகளில் இருந்தும் இஸ்ரேலுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதனால் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிலும் குறிப்பாக காசாவை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு உடனே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இஸ்ரேல் ஹமாஸ் போரில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்நிலையில் மேகாலயா எம்பி ஒருவர் இஸ்ரேலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன்படி பெத்தலகேம் புனித யாத்திரைக்குச் சென்ற மேகாலயா எம்.பி கர்லுக்கி, அவரது மனைவி, மகள் உட்பட 27 பேர் இஸ்ரேலில் சிக்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இஸ்ரேலில் சிக்கி இருந்த 27 இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேகலாயா முதலமைச்சர் கொன்ராட் ச்ங்கமா எக்ஸ் (ட்விட்டர்) பதிவில் தெரிவிக்கையில், “இஸ்ரேலில் சிக்கி கொண்ட 27 இந்தியர்களும் எகிப்து வந்தடைந்தனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரக முயற்சியால் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 27 பேரும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்