Skip to main content

“ரஷ்ய அதிபரின் கண்களைப் பார்த்து...” - பிரதமர் மோடி தகவல்!

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
Prime Minister Modi Information on russia and ukrain conflict

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய இந்த தேர்தல், ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே, மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதி அன்று 96 தொகுதிகளுக்கு நான்காம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி ஆந்திரா (25), தெலுங்கானா (17), பீகார் (5), ஜம்மு (1), மத்தியப் பிரதேசம் (8), மகாராஷ்டிரா (11), ஒடிசா (4), உத்திரப் பிரதேசம் (13), மேற்கு வங்கம் (8), ஜார்க்கண்ட் (4) உள்ளிட்ட 96 தொகுதிகளுக்கு இன்று (11-05-24) மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. அதுமட்டுமல்லாமல், வரும் 13ஆம் தேதி 96 மக்களவைத் தொகுதிகளுடன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற இருக்கிறது. 

இந்த தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், பா.ஜ.க, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட தேசிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், பிரதமர் மோடி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ரஷ்யா- உக்ரைன் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பெரும்பாலான நாடுகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. நாம் மட்டும் தான் யாருடைய நிலைப்பாடு என மிகத் தெளிவாக உள்ளது. 

நாம் யாருடைய பக்கமும் இல்லை, அமைதிக்கு ஆதரவானவர்கள். எனவே, ஆயுதம் கொடுப்பதையோ, சண்டையிடுவதையோ பேசாதவர்கள் நாம் மட்டும்தான் என்று உலகம் நம்புகிறது. நான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் உட்காரத் துணிந்தேன். அவரது கண்களைப் பார்த்து, இது போரின் நேரம் அல்ல என்று கூறினேன். இந்தியா தனது நிலையை இந்த உலகில் உருவாக்கியுள்ளது” என்று கூறினார். 

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்