Skip to main content

‘ஆந்திரப் பிரதேசத்தில் யார் வெல்வார்?’ - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Prashant Kishore Prediction Who Will Win Andhra Pradesh

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (13.05.2024) நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

நேற்று நடைபெற்ற தேர்தலில், ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, ஆந்திராவின் பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது. இதில், இரு கட்சியினரும் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் இரு கட்சியினரும் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கி மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதல் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வந்ததால் பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு தேர்தல் நடந்து முடிந்தது. 

ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகிய கட்சிகளுடன் பா.ஜ.க கூட்டணி அமைத்து போட்டியிட்ட்டது. அதே போல், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் என தேர்தல் வியூக கணிப்பாளர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாவது, “கடந்த சில மாதங்களாக ஜெகன் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கூறி வருகிறேன். அதன்படி, ஆந்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் இந்த முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 51 - 67 இடங்களை மட்டுமே பிடிக்கும். அதேநேரம், தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி 106+ இடங்களை வெல்லலாம். மக்களவை தொகுதிகளைப் பொறுத்தவரை தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 15 இடங்களும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களும் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்