Skip to main content

பாஜகவிற்கு 8 முறை வாக்களித்த சிறுவன் கைது; வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
issue of Farrukhabad Lok Sabha Constituency of Uttar Pradesh State

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (20.05.2024) காலை 07.00 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஃபரூக்காபாத் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 13 ஆம் தேதி 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு பாஜக சார்பில் முகேஷ் ராஜ்புட் போட்டியிட்டார். இத்தகைய சூழலில் ஃபரூக்காபாத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி அணில் சிங் தாகூர் என்பவரின் 16 வயது மகன் ராஜன் சிங் பாஜக வேட்பாளர் முகேஷுக்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் 8 முறை வாக்களித்துள்ளார். இதனை அவரே தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் வாக்கு இயந்திரத்தின் பட்டனை அழுத்தும் போது தனது விரலால் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிக்கொண்டே 8 முறை வாக்கைப்பதிவு செய்வதும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. 

issue of Farrukhabad Lok Sabha Constituency of Uttar Pradesh State

18 வயது நிரம்பாத அச்சிறுவன் வாக்குச்சாவடிக்குள் சென்று பாஜகவிற்கு 8 முறை வாக்களித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை வாக்களிக்க அனுமதித்த விவகாரத்தில் வாக்குச்சாவடியில் இருந்த அனைத்து அலுவலர்களையும் பணியிடை நீக்கம் செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அம்மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதீப் திரிபாதி கொடுத்த புகாரின் பேரில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். அதே சமயம் இந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி பரிந்துரை செய்துள்ளார்.

இந்த விடியோவை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, “இது தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால், நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில். பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் பதிவைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., “பாஜக தனது தோல்வியை முன்னதாகவே யூகித்து அதனை ஏற்க மறுத்து வாக்கு இயந்திரத்தின் மீது அழுத்தம் கொடுத்து ஜனநாயகத்தைக் கொள்ளையடிக்க நினைக்கிறது. தேர்தல் கடமையைச் செய்யும் அனைத்து அதிகாரிகளும் அதிகாரத்தின் அழுத்தத்திற்கு முகங்கொடுத்து அரசியல் சாசனப் பொறுப்புகளை மறந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. இல்லையெனில் இந்தியா கூட்டணி அரசு அமைந்தவுடன் எதிர்காலத்தில் அரசியலமைப்புச் சட்டப் பிரமாணத்தை அவமதிக்கும் முன் யாரும் 10 முறை யோசிக்கும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்