Skip to main content

'ஆட்டோ சங்கர்' உருவான நிமிஷம்! ஆட்டோ சங்கர் #4

Published on 20/05/2018 | Edited on 25/05/2018

யாரையாச்சும் முதுகிலே தட்டறோம்னா அது பாராட்டுறதுக்காகத்தான் இருக்கணும்னு  நினைக்கிறவன் நானு. ஆனா, எனக்கு முதுகிலே விழுந்த  தட்டுகள் எல்லாமே என்னை  தட்டுத் தடுமாறி விழ  வைக்கிறதாதான் இருந்துச்சு.
 

auto sankar



நான் கடன்தான் கேட்டேன். கப்பம் எதுவும் கேட்கல. கடன் கேட்டதுக்குத்தான்  கான்ஸ்டபிள் அப்படி நையப்புடைச்சாரு. "அப்பம் கேட்கிற பிள்ளைக்கு எந்த  தகப்பனாவது கல்லைக்கொடுப்பானா?'ன்னு பைபிள்லே ஒரு வசனம்  வரும். எனக்கு  அன்னிக்கு கல்லைக் கொடுத்தாங்க. சட்டத்தின் பாதுகாவலரே கொடுத்தார். உடம்பெல்லாம் வலி! சட்டை, ட்ரவுசர்லாம் சேறு... (அப்ப நான் அதிகமா ஆஃப் ட்ரவுசர்தான்போடுவேன்).

அவமானத்திலே கூனிக்குறுகிப் போனேன். அப்பவும் எனக்குக் கோபம் வரல. கண்ணீர்தான் வந்துச்சு. அதையும் அவங்க  பார்த்துடக்கூடாதேன்னு அடக்கிக்கிட்டு சிரமப்பட்டேன்.

மழையிலேயும், கண்ணீர்லேயும் நனைஞ்சிகிட்டே வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்குள்ளே  நுழைய மாட்டாம வெளியிலேயே நின்னேன். ஜெகதியும், கீதாவும் பட்டினி கிடக்கும்  பரிதாபம். நா அடிபட்ட வேதனை எல்லாம் சேர்ந்து  தொண்டைக்குள்ளேயும் கண்ணீர்  சுரந்த மாதிரி  வேதனை. 

நா வீதியிலே நிக்கிறதைப் பார்த்துட்டு ஜெகதி, "ஏன்  மழையிலே நனைஞ்சுகிட்டு  நிக்கறீங்க சிலை மாதிரி''ன்னு சொன்னவ, என் சட்டை  ட்ரவுசர்லே சகதியைப்  பார்த்துட்டு "ஐய்ய.. என்ன இந்த கோலம்?''ன்னு கேட்டா. "நா கீழே விழுந்துட்டேன் ஜெகதி''ன்னு  சொல்லிட்டு "ஓ'ன்னு  அழுதேன்.  அடி  வாங்கினேன்னு  சொல்றதுக்கு  வெக்கம்!  அதே சமயம், அந்தச் சம்பவம் கொடுத்த அவமானமும் வலியும் கதறி அழ  வைச்சுடுச்சு.

 

flooded slum



ஜெகதி பதறிப்போனா. "முதல்ல உள்ளே வந்து தலையைத்துவட்டுங்க''ன்னு  கையப்பிடிச்சு இழுத்துப்   போனா.  என்  வாய்க்குள்ளே  இன்னமும்  ரத்தம்  வழிஞ்சது.  ஜெகதி  பார்த்துடக்கூடாதேன்னு நாக்கினாலே வாய்க்குள்ள இருந்த
ரத்தத்தையெல்லாம்  ரகசியமா துடைச்சேன்.

குழந்தை கீதா குடிசையிலே ஒரு மூலையிலே தூங்கிட்டிருந்தது. தூக்கம்தானா?  மயக்கமா? எனக்கு ரொம்ப சங்கடமாப்  போச்சு. குழந்தையை எடுத்து என் மடியிலே  போட்டுக்கிட்டேன். கைகள் ரெண்டும் அடி வாங்கினதிலே  விறுவிறுன்னு தாங்க 
முடியாத வலி!

"கடைக்காரர்கிட்டே அரிசி கடன் கேட்கறேன்னு போனீங்களே...  என்னாச்சு...?''

நாடாரை ஞாபகப்படுத்தினதும் அழுகை திரும்ப பொங்கிக்கிட்டு  வந்துச்சு...

"கடனெல்லாம் கிடையாதுன்னுட்டான் ஜெகதி...''

ஜெகதி பரிதாபமாகப் பார்த்தா.

"இனிமே தாக்குப்பிடிக்க முடியாதுங்க. குழந்தைங்க பசியிலே  செத்துடும். எனக்கே  காதை அடைச்சுக்கிட்டு மயக்கமா வருது... சைதாப்பேட்டைக்குப்  போய் பெரியவர் (சண்முகம் மேஸ்திரி)கிட்டே ஐம்பது ரூபா கடன் கேளுங்களேன்...''

அது சரியான யோசனையா எனக்குப் படல. மேஸ்திரி  அண்ணனும் இந்த மழையில  கஷ்டம்தான்  படுவாரு. தவிர, இந்த வெள்ளத்திலே நீந்தி  பஸ் பிடிச்சி  சைதாப்பேட்டைக்குப் போய் திரும்ப... துட்டு நடந்தே  போகலாம்னா  திரும்ப  சாயங்காலமாயிடும். அவரும்  கைவிரிச்சுட்டா?

ஆனாலும் வேற வழியில்ல. அவரைத்தவிர யாரையும் எனக்குத்  தெரியாது. கேட்டுப்பார்க்க வேண்டியதுதான்னு எழுந்திரிச்சேன். தலையிலே கோணிச்சாக்கு. வீதியிலே இறங்கி நடந்தேன். நாடார் கடையைத்  தாண்டித்தான்  மெயின் ரோட்டுக்கு போகணும். கடையை நெருங்க நெருங்க அறுபட்ட  புழு மாதிரி துடிச்சேன். போலீஸ் அடிச்ச ஒவ்வொரு அடியையும் மனசுக்குள்ளே திரும்ப வாங்கினேன். மறுபடி ஒரு தரம் சகதியிலே உருண்டு,  புரண்டு, விழுந்து... வலியிலே  துடிச்சு...

 

 

auto sankar



கடை வாசல்ல நின்னு நாடார் சிகரெட் புடிச்சிக்கிட்டிருந்தார். என்னைப் பார்த்ததும்  கேலியா சிரிச்சார். 'என்னடா அடி எப்படி இருக்கு?'ன்னுன்றது மாதிரியான சிரிப்பு.  சிகரெட் பொகை மொத்தத்தையும் அம்பு மாதிரி என் முகத்துக்கு நேரா அனுப்பினார். நான் நின்னு திரும்பிப் பார்த்தேன். அவர் முகத்திலே திரும்ப கேலிச் சிரிப்பு. என்னைச்  செல்லாத  நயா பைசாவைப் பார்க்கிற மாதிரி அருவருப்பா பார்த்தார். எனக்கு ரத்தம்  கொதிச்சது. உள்ளுக்குள்ளே புஸ்புஸ்ஸுன்னு புகைஞ்சது.

அவரை நெருங்கிப் போனேன். அப்ப எனக்கு 'மெட்ராஸ்  தமிழ்'  பேசத் தெரியாது.  புழக்கத்திலேயிருந்த கெட்ட வார்த்தைகள் எதுவும் தெரியாது.  டீசன்ட்டாத்தான்  பேசுவேன்!

"நாடாரே, நான் தி.மு.க. கட்சிக்காரன். ஆனால், எம்.ஜி.ஆர்.  ரசிகன். நான் எந்தத் 
தப்பும்  பண்ணாம  அடிவாங்க வச்சியே... இப்ப வட்டியும் முதலுமா வாங்கிக்கோ''

அந்த ஆள கொத்தா சட்டையை ரெண்டு கையாலேயும் புடிச்சு வெளியே இழுத்தேன்.  வெறி தீருமட்டும்  நடுரோட்டிலே மழை நீரில் சேற்றில்  படுக்க வச்சு அடிச்சேன்.  நெஞ்சிலும், முகத்திலும் எட்டி எட்டி உதைச்சேன். மூஞ்சி முகரையெல்லாம் 
அவனுக்கு  ரத்தம்! சகதியிலே படுத்துகிட்டே என்னைக் கையெடுத்துக் கும்பிட்டார்.

"அண்ணே என்ன அடிச்சே கொன்னுடாதீங்க அண்ணே'' -எனக்கு ஆத்திரம் தீரலை.
கடை பெஞ்ச் மேலே இருந்த காய்கறித் தட்டுகளை எடுத்து ரோட்டிலே விசிறினேன்.  பிஸ்கட் பாக்கெட், மிட்டாய் பாட்டில் அத்தனையும் பிய்ச்சு  எறிஞ்சேன். கடையே  அலங்கோலமாச்சு.

"பசி வந்தா பத்தும் பறந்து போகும்'பாங்க. அன்னிக்கு ஒரு நாடார் கடை பறந்து போக  எனக்குப் பசி வந்ததுதான் காரணமா? பாதிப்பு வந்ததும்தான் காரணம்ன்னு நான்  நினைக்கிறேன். அந்தக் கடைக்காரரை அவ்வளவு தூரம் புரட்டி எடுத்தும்  தடுக்க யாரும் வரலை. பக்கத்துக் கடைக்காரங்களெல்லாம்  வேடிக்கைதான்  பார்த்துக்கிட்டிருந்தாங்க.

ஒரு தடவை சர்ச்சில்கிட்டே அவரோட நண்பர், "நீங்க பேசற கூட்டங்களுக்கு நிறைய கூட்டம் வருதே'ன்னு பாராட்டினாராம். அதற்கு  சர்ச்சில், "நாளைக்கு என்னை பொது இடத்திலே தூக்கில் போடட்டும், அதைப் பார்க்க  இதைவிட அதிகமாக கூட்டம் வரும்'ன்னு சொன்னாராம்.

ஜனங்க, தனக்கு ஆபத்து வராதவரையில் சரின்னு இப்படி வேடிக்கை பார்க்கப் 
பார்க்க  வன்முறையும், ரௌடிகளும் தோன்றிக்கிட்டேதான் இருப்பாங்க. நாடார் அடிவாங்கும்போது மட்டுமில்லை... நான் அடிவாங்கும்போதும் தலையிட்டு  போலீஸ்காரர்கிட்டே 'எதற்காக இப்படி நடுரோட்டிலே ஒருத்தனை அடிக்கிறீங்க?  உங்களுக்கு யார் அந்த அதிகாரம் தந்தது'ன்னு கேட்பதற்கென்ன? பயம்! நியாயத்தைக்  கேட்கவே பயப்படுகிறபோது வேடிக்கை என்ன வேண்டிகிடக்குது?

கடையை சூறையாடத் தொடங்கினதும் நாடார் என் காலைப் புடிச்சுக்கிட்டு கெஞ்ச  ஆரம்பிச்சாரு. சட்டுனு  அமைதியானேன். கடையிலேயிருந்து பேப்பரை எடுத்தேன்.  தோராயமா ஒரு கிலோ அரிசியை பொட்டலமா கட்டி எடுத்தேன்.

"இது எவ்வளவு அரிசிடா இருக்கும்?'' -கடைக்காரர் மென்று முழுங்கினாரு.

"ஒரு... கிலோ இருக்கும்!''

"இதை நான் கடன் கேட்டதுக்குப் போலீஸைவிட்டு அடிச்சேல்ல? இப்ப அரிசியை  சும்மாவே  எடுத்துட்டுட்டுப் போறேன்! இப்ப போலீஸ்ல போய் ரிப்போர்ட் குடுடா! 
என்  பேரு சங்கர். பொம்மைக்காரர் வீட்டுக்குப் பக்கத்து வீட்லதான் இருக்கேன்னு 
என் அட்ரஸையும் சொல்லுடா நாயே...''

மறுபடி அவர் நெஞ்சிலே ஒரு மிதி! வலியிலே சுருண்டுட்டாரு. பொட்டலத்தோட 
வீட்டுக்கு  நடந்தேன். வழியிலேயே தேங்கியிருந்த மழைத்தண்ணியிலே முகம் கை,
கால்  கழுவினேன்.

"அதுக்குள்ளே வந்துட்டீங்களே.. சைதாப்பேட்டை போகலையா?''

"இல்லை ஜெகதி! நாடாரே கூப்பிட்டு கடன் கொடுத்தாரு... வாங்கிட்டு வந்துட்டேன்.''

பொய் சொன்னேன்! நாடாரை உதைச்சு சம்பாதிச்ச அரிசின்னு  சொல்ல கூச்சம்.  உள்ளுக்குள்ளேயிருந்த  இன்னொரு சங்கருக்கு இன்னமும் இந்த 'கொள்ளை'யிலே  உடன்பாடு  இல்ல. கஞ்சி  காய்ச்சி  குடிச்சதும்  பெண்டாட்டி,  பிள்ளைங்களுக்கு 

வயிறு  ரொம்பின திருப்தி. குழந்தை கீதா  என்  மடியிலேயே  மறுபடி  தூங்கிச்சு. 
ஜெகதி  என்  தோளிலே  சாய்ஞ்சுகிட்டா. எல்லாரும்  கண்ணயர்ந்துட்டாங்க!

 

 

cooking



எனக்குத் தூக்கம் வரலை. பசி அடங்கின பிறகுதான் பயம், சிந்தனை எல்லாம்  சுறுசுறுப்பாச்சு. அடிபட்ட நாடார் எப்படியும் போலீஸுக்குப் போயிருப்பான். கடன்  கேட்டதுக்கே  பின்னி  எடுத்த  போலீஸ்,  கொள்ளையடிச்சதுக்கு  சும்மா இருப்பாங்களா?  அடிச்சு இழுத்துட்டுப்போய் லாக்கப்பிலே வைப்பாங்களே? ஜெகதி, கீதால்லாம்  இன்னுமில்லே  சோத்துக்கு  திண்டாடுவாங்க?  யோசிச்சபடியே  தூங்கிட்டேன்.

யாரோ தட்டி எழுப்ப பதறிப்போய் எழுந்தேன். 

"விடிஞ்சுடுச்சு! எழுந்திரிங்க'' -ஜெகதிதான் எழுப்பினது. "ஏன் இப்படிப் 
பயப்படறீங்க?''

எனக்கு ஆச்சரியமாயிருந்துச்சு. இன்னும் ஏன் போலீஸ் வரல மெல்ல எழுந்து  வேப்பங்குச்சி ஒடிச்சு பல்லுல மென்னுகிட்டே கடைவீதி பக்கம் போனேன். மனசுக்குள்ளே குறுகுறுப்பு. 

நாடார் என்ன ஆனார்ன்னு தெரிஞ்சுக்க ஒரு ரகசிய ஆவல். நாடார்  கடையையெல்லாம்  சுத்தம்  பண்ணி  ஊதுபத்தி  ஏத்தி  வச்சுக்கிட்டு  உட்கார்ந்திருந்தாரு.  முகமெல்லாம் வீக்கம்!

நான் மெல்ல எட்டிப்பார்த்ததும் அவரும் என்னைப் பார்த்துட்டாரு. எனக்கு உள்ளுக்குள்ளே உதறல். இருந்தாலும், இப்ப ஓடி ஒழிஞ்சா அந்த ஆளு 'தாட்டியம்' பண்ணிடுவானேன்னு  தோணிச்சு.  கெத்தா  நடந்தேன் அவரைப்பார்த்து!  வேப்பங்குச்சியை வாயோட ரெண்டு  ஓரத்துக்கும் நகர்த்தினேன் ஸ்டைலா! உப்பு மூட்டை மேலே ஒரு காலைத் தூக்கி  வச்சேன். 

"என்னடா? ரிப்போர்ட் கொடுக்கலையா இன்னும்?''

கடைக்காரர் பெரிய கும்பிடாய் போட்டார்.

"அண்ணே! வாங்கண்ணே! நீங்க பெரிய ரௌடின்னு எனக்குத் தெரியாதுண்ணே!  உங்களைப் பத்தி  தெரியாம ரிப்போர்ட் பண்ணிட்டேன்; போலீஸ்ல சொன்னது 
தப்புதான்.இனிமே, கடையை சேதம் பண்ணிடாதீங்க! பெறகு என் வயித்திலே 
ஈரத்துணிதான்! இந்தாங்க. இந்த பையிலே அஞ்சு கிலோ அரிசி, பருப்பு, காய்கறி 
எல்லாம் இருக்கு. வாரம் ஒருநாள் இப்படி ஒரு பை தாரேன்! ஏதோ நடந்தது 
நடந்துபோச்சு. மனசிலே எதையும்  வச்சுக்காதீங்க!''

எனக்கு ஒண்ணுமே புரியலை. நான் ரௌடியாமே? அழறதா, சிரிக்கிறதான்னு 
தெரியல.முந்தின நாள் அடிவாங்கினப்ப கண்ணீரை மறைக்க சிரமப்பட்டது மாதிரி 
இப்ப சிரிப்ப மறைக்கிறது சிரமமா இருந்துச்சு. கேவலம் எனக்குப் போய்  பயப்படறானே! ஒருவேளை நடிக்கிறானோ? அப்படித்தான் இருக்கும். கடன் கேட்டதுக்கே கடுப்பானவன் இனாமா தர்றதுக்கு இழிச்சவாயனா என்ன? ஒருவேளை, போலீஸ் வர்ற வரைக்கும்  என்னை நிறுத்தி வைக்க நாடகமாடறானோ?

சந்தேகமாயிருந்துச்சு. என்கிட்டே அடிபட்ட நாடாருக்கு போலீஸ் சப்போர்ட் வலுவா  இருந்துச்சு. அப்படிப்பட்டவரையே அடிச்சேன்னதால சுலபமா சண்டியர் பட்டம்!  நாடார்கிட்டே இருந்து அரிசிப்பையை வாங்கிக்கிட்டேன். வீட்டுக்கு நடையைக்  கட்டினேன்!

அநேகமா  'ஆட்டோ சங்கர்' உருவான நிமிஷம் அதுதான்னு நினைக்கிறேன்.