Skip to main content

கோபர் நிகஸும் கலிலியோவும்...! டெலஸ்கோப்பின் கதை பகுதி 1

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

தொடக்க காலத்தில் பூமி தட்டையான நிலப்பரப்பாக கருதப்பட்டது. அதாவது, ஒரு திசையில் தொடர்ந்து நடந்தால் பூமியின் முடிவில் அதலபாதாளம் இருப்பதாக நினைத்தனர்.

 

telescope story part 1

 

பூமியை மையமாக வைத்து சூரியனும் சந்திரனும் சுற்றி வருவதாக கருத்து நிலவியது. வானம் என்பது திடப்பொருளாகவும், நட்சத்திரங்கள் அனைத்தும் இறைவன் படைத்த ஒளிவிளக்குகள் எனவும் நினைத்தனர்.

 

பைபிள் இப்படித்தான் போதித்தது. கிறிஸ்தவ தலைமையகம் இதைத்தான் வலியுறுத்தியது. பைபிள் எதைச் சொல்கிறதோ அதுதான் மாற்றமுடியாத உண்மை என்றும், பைபிளின் போதனைக்கு மாறாக யார் கருத்து சொன்னாலும் அது குற்றம் என்றும் கருதப்பட்டது.

 

இந்நிலையில் தான் வானவியல் அறிஞர்கள் தாலமியும், கோபர்நிகஸும் வானசாஸ்திரத்தில் புதிய ஈடுபாட்டை வளர்த்தனர். பூமி மையமாகவும் அதை சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் சுற்றி வருவதாகவும், தாலமி கூறினார்.

 

ஆனால் சூரியன் தான் மையத்தில் இருப்பதாகவும் பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றுவதாகவும் கோபர்நிகஸ் புதிய கோட்பாடு ஒன்றை வெளியிட்டார். எனினும், தான் கண்டுபிடித்ததை அவர் வெளியில் சொல்லவில்லை.
 

சக்தி வாய்ந்த கத்தோலிக்க தலைமையகம் தனக்கு தண்டனை அளித்துவிடும் என்று அவர் அஞ்சினார். பிரபஞ்சத்தின் மையத்தில் பூமி இருக்கிறது. பூமியைச் சுற்றும் கிரகங்கள் கோளவடிவில் இருக்கின்றன. அவற்றில் மலைகளோ, பள்ளத்தாக்குகளோ இல்லை என்று கத்தோலிக்க தலைமையகம் நம்பியது. அந்த நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை அது வரவேற்கவில்லை.

 

கோபர்நிகஸ் கண்டுபிடித்த உண்மையை கலிலியோ உறுதிப்படுத்தினார். 1609-ஆம் ஆண்டு கலிலியோ கலிலி என்பவர் ஒரு வித்தியாசமான கருவியைக் கண்டுபிடித்தார். இரவு நேர வானத்தை நோக்கி அந்த கருவி வழியாக பார்த்தார். வெறும் கண்ணால் பார்க்கும் வானத்தை விட இப்போது வானம் மிகத் துல்லியமாக தெரிந்தது.

 

நிலவை வெறும் கண்ணால் பார்க்கும் போது கிரே மற்றும் வெள்ளை நிறம் கலந்த பொருளாக மின்னும். ஆனால் தனது புதிய கருவி வழியாக அதைப் பார்த்த கலிலியோ, நிலவின் மேற்பரப்பில் நிழல் பரப்புகளும், வெளிச்சம் மிகுந்த புள்ளிகளும் தெரிவதை கண்டார். நிழற்பரப்புகள் பள்ளத்தாக்குகள் எனவும், வெளிச்சம் மிகுந்த புள்ளிகள் மலைகள் எனவும் அவர் உணர்ந்தார்.

சாதாரணமாக பார்க்கும் போது இரவு நேர வானில் வெறும் புள்ளிகளாகத் தெரியும் நட்சத்திரங்கள் கோளவடிவங்களாக தெரிந்தன. சில கிரகங்களுக்கு நிலவுகள் இருப்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

 

தான் கண்டுபிடித்த உண்மைகளை நட்சத்திரங்கள் தரும் செய்திகள் என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டார். அவருடைய இந்த கண்டுபிடிப்புகள் பெரும் வியப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தின.

 

தான் கண்டுபிடித்த கருவிக்கு இத்தாலி மொழியில் டெலஸ்கோப்பியோ என்று பெயரிட்டு கத்தோலிக்க தேவாலய தலைமையகத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தார். டெலஸ்கோப்பியோ என்றால் தொலைவில் இருக்கும் பொருளை பார்க்க உதவும் கருவி என்று அர்த்தம்.

 

கலிலியோவின் இந்த டெலஸ்கோப் மிக எளிமையான கருவியாகும். அது ஒரு குழல் வடிவில் இரண்டு லென்சுகளுடன் உருவாக்கப்பட்டிருந்தது. ஒரு முனையில் குவிலென்சும், மறு முனையில் குழிலென்சும் பொருத்தப்பட்டிருந்தது.

 

telescope history part 1

 

எதிரிகளின் ராணுவ முகாம்களை உளவு அறிவதற்காக அப்போதுதான் ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அந்த மாதிரியில்தான் கலிலியோ தனது கருவியையும் உருவாக்கினார்.

 

அவர் உருவாக்கிய அந்த முதல் கருவிதான் இப்போது வரை டெலஸ்கோப்புக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.

 

கலிலியோ தனது சிறிய டெலஸ்கோப் வழியாக பார்த்தபொழுது ஒரு கிரகத்தின் முழு உருவத்தையும் ஒரே சமயத்தில் பார்க்கமுடியவில்லை. அவருடைய டெலஸ்கோப் உருவாக்கப்பட்டதில் பல குறைபாடுகள் இருந்தன. சாதாரண உருவத்தை அது 30 மடங்கு பெரிதாகக் காட்டியது. உருவமும் மங்கலாகவே தெரிந்தது.

 

அவருடைய ஆராய்ச்சி விரிவாகிக் கொண்டே போனது. இது அவருக்கு எதிரிகளை உருவாக்கியது. இந்த சமயத்தில் தான் அவர் முக்கியான விஷயத்திற்குள் நுழைந்தார். சந்திரன் தேய்ந்து மறைவதை போல, வெள்ளிகிரகமும் தேய்ந்து மறைவதை அவர் கண்டறிந்தார். இதையடுத்து அந்த கிரகம் பூமியைச் சுற்றவில்லை. மாறாக, அது சூரியனைச் சுற்றுகிறது என்று அறிந்தார்.

 

அதுபோல, வியாழன் கிரகத்தின் நிலவுகள் வியாழனைத் தான் சுற்றுகின்றன என்பதையும் கண்டறிந்தார். இருந்தாலும், கலிலியோ மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டார். தான் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டால் அது கத்தோலிக்க தேவாலயத்தின் நம்பிக்கைக்கு எதிரானதாக இருக்கும் என்பதை உணர்ந்தார்.
 

பைபிளின் கருத்தை மறுத்தால், அந்த காலகட்டத்தில் மரணதண்டனைதான் விதிக்கப்படும். இருந்தாலும், தனது கருத்தை வெளியிட்டே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. முன்பு அவரை ஆதரித்த கத்தோலிக்க தேவாலயம், இப்போது அவருக்கு எதிராக திரும்பியது. தான் கண்டுபிடித்த உண்மைகளை வெளியிடக்கூடாது என்று அது தடை விதித்தது.

 

விசாரணைக் கூண்டில் நிறுத்தி சாகும் வரை வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. (கலிலியோ கூண்டில் நிறுத்தப்பட்டு கல்லால் எறிந்து கொல்லப்பட்டதாகவும், நெருப்புக்குள் இறக்கி கொல்லப்பட்டதாகவும் முன்பு தகவல்கள் வெளியாயின. பின்னர், அதற்கு ஆதாரம் இல்லை என்று மறுக்கப்பட்டது.)

 

வீட்டுச்சிறையில் இருந்த போதும் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டார். கிறிஸ்தவ மதத்துக்கும் தனக்கும் கருத்து மோதல் எதுவும் இல்லை என்று கலிலியோ வாதிட்டார். மனிதனின் ஆய்வுத்திறன் மிகப்பெரிய வரம் என்றார்.

 

நம்மை படைத்த கடவுள் தான் அறிவையும், மொழிகளையும், புத்திசாலித்தனத்தையும் அளித்திருக்கிறார். அவற்றை ஓரங்கட்டி புதைத்துவிடும்படி அவர் கூறவில்லை. கண்ணால் பார்க்கும் உண்மைகளை ஏற்க மறுப்பதை அவர் விரும்ப மாட்டார் என்று கலிலியோ ஆணித்தரமாக கூறினார்.

 

வானத்தின் அடர்த்தியை நாம் அறிந்து கொள்வதற்கு கலிலியோ வழிவகுத்தார். பிரபஞ்சத்தின் ரகசியங்கள் இன்னமும் விரிவடைந்து கொண்டே போகின்றன. எடுத்தவுடன் தனது டெலஸ்கோப்பை அவர் உருவாக்கிவிடவில்லை. சுமார் 100-க்கும் மேற்பட்ட டெலஸ்கோப்புகளை அவர் உருவாக்கினார். அவற்றில் 10 டெலஸ்கோப்புகள் மட்டுமே ஓரளவு அவருக்கு உபயோகமாக இருந்தன.
 

1608-ஆம் ஆண்டு ஹாலந்தைச் சேர்ந்த ஹேன்ஸ் லிப்பர்ஸே என்ற கண்கண்ணாடி செய்யும் நபர் தனது புதிய கருவிக்கு காப்புரிமை கேட்டிருந்தார். தனது கடையில் சிறுவர்கள் இரண்டு லென்சுகளை ஒரே நேர்க்கோட்டில் பிடித்து பொருட்கள் மிக அருகாக தெரிவதாக கூறியதைக் கேட்டார் லிப்பர்ஸே.

 

அந்த அடிப்படையில் தான் ஐ ஸ்பை என்ற தொலைநோக்கு கருவிக்கு காப்புரிமை கோரியுள்ளார். அவருடைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் கலிலியோ தனது டெலஸ்கோப்பை உருவாக்கினார்.

 

கலிலியோவின் முதல் டெலஸ்கோப் 10 அடி நீளத்துடன் குழல் வடிவில் இருந்தது. அந்த டெலஸ்கோப் வழியாக 20 மடங்கு உருப்பெருக்கி பார்த்தாலும் கூட நிலவின் கால் பகுதி மேற்பரப்பை மட்டுமே பார்க்கமுடியும்.

நிலவிலிருந்து டெலஸ்கோப் வழியாக ஊடுறுவும் ஒளிக்கதிர்கள் சிதறின. எனவே நிலவின் தோற்றம் மங்கலாக இருந்தது. இந்தக் குறைபாடுகளை கலிலியோவால் சரிசெய்ய இயலவில்லை. கண்ணாடியை லென்சாக மாற்றும் தொழில்நுட்பம் முன்னேறி இருக்கவில்லை. எனவே, அந்த லென்சுகள் துள்ளியமாக இல்லை.

 

கலிலியோவின் டெலஸ்கோப்பை மாதிரியாகக் கொண்டு பல டெலஸ்கோப்புகள் அந்த காலகட்டத்திலேயே உருவாக்கப்பட்டன. அவற்றின் வழியாக பார்த்தவர்கள் கலிலியோ சொன்னது போல நிலவின் தோற்றம் இருக்கவில்லை என்று உணர்ந்தனர்.

 

கலிலியோ வெளியிட்ட விவரங்களை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மட்டுமே பார்க்கவேண்டும் என்பதை சிலர் மட்டுமே புரிந்து கொண்டனர்.

 

 

கலிலியோ வாழ்க்கை குறிப்பு

 

1564-ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தவர் கலிலியோ. சின்ன வயதில் கலிலியோ கேள்வி கேட்பவராக வளர்ந்தார்.

 

பைஸா நகரத்தில் கணித பேராசிரியராக பணிபுரிந்தார். அங்கு தனக்கென்று ஒரு மாணவர் கூட்டத்தை அவர் பெற்றிருந்தார்.

 

கிரேக்க அறிஞரான அரிஸ்டாட்டில் ஒரு கோட்பாட்டை வெளியிட்டிருந்தார். பல்வேறு எடையுள்ள பொருட்களை உயரமான இடத்திலிருந்து கீழே போட்டால் வெவ்வேறு நேர வித்தியாசத்தில் அவை பூமியைத் தொடும் என்பது அவருடைய கோட்பாடு.

 

இந்தக் கோட்பாடு தவறு என்று கலிலியோ உணர்ந்தார். பொருட்களின் எடை ஒரு பொருட்டே அல்ல. வேறுபட்ட எடையுள்ள பொருட்களை உயரத்திலிருந்து போட்டால் அனைத்துமே ஒரே நேரத்தில் பூமியைத் தொடும் என்று கூறினார்.

 

தனது மாணவர்களை உயரமான கோபுரத்துக்கு அழைத்துச் சென்று தான் கூறியது சரிதான் என்பதை நிரூபித்துக் காட்டினார்.

 

எந்த ஒரு விஷயத்தையும் சோதனை செய்து சரி அல்லது தவறு என்று நிரூபிக்கும் ஆற்றலை கலிலியோ பெற்றிருந்தார்.

 

1609-ஆம் ஆண்டு கலிலியோ டெலஸ்கோப்பை உருவாக்கி வானத்தை நோக்கி திருப்பினார். நிலவில் மலைகளும், பள்ளத்தாக்குகளும் உள்ளன. சாதாரணமாக பார்க்கும் போது வானத்தில் தெரிவதைக் காட்டிலும் கூடுதலாக நட்சத்திரங்கள் உள்ளன. கிரகங்களில் தோன்றும் புள்ளிகள் பூமியின் நிலவைப் போல துணைக்கோள்கள்தான் என்றெல்லாம் கலிலியோ நிரூபித்துக் காட்டினார்.

 

நமது சூரியக்குடும்பத்தில் சூரியன் நடுநாயகமாக இருக்கிறது. மற்றக் கிரகங்கள் அதைச் சுற்றுகின்றன என்று தெரிவித்தார். சக்தி வாய்ந்த கத்தோலிக்க தேவாலயம் அவரை வீட்டுச் சிறையில் தனிமைப் படுத்தியது. இருந்தாலும், சாகும் வரை அவர் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.