Skip to main content

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட முடியலையே! - ஏங்கும் தினேஷ் கார்த்திக்

Published on 20/03/2018 | Edited on 21/03/2018

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறவில்லை என தினேஷ்கார்த்திக் தெரிவித்துள்ளார்.

 

Dinesh

 

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நடத்தப்பட்டது நிடஹாஸ் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர். இந்தத் தொடரில் இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில், வங்காளதேசம் அணி நிர்ணயித்த 167 ரன்களை இந்திய அணி சேசிங் செய்தது. கடைசி பந்தில் ஐந்து ரன்கள் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். மேலும், வெறும் 8 பந்துகளையே சந்தித்த அவர் 29 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 32 வயதான அவரது எதிர்காலத்தையே மாற்றியது அந்த ஆட்டம் என்றே சொல்லலாம். 

 

அந்த வெற்றி தந்த உற்சாகத்திற்குப் பின்னர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தினேஷ்கார்த்திக், ‘தற்போதைய சூழலில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் இருக்கிறோம். இது நல்ல விஷயம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இது சுலபமான விஷயம் அல்ல. ஆனால், ஐ.பி.எல்., டி.என்.பி.எல். உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் அணியில் வாய்ப்பைப் பெறலாம். ராஞ்சிக் கோப்பைக்கான தமிழக அணியில் விளையாடி இருக்கிறேன். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் உள்ளது. அணி நிர்வாகத்தின் தேர்வில் ஏலத்தின் மூலம் ஒருவர் எடுக்கப்படும்போது நம் கையில் எதுவும் இல்லையே’ என தெரிவித்துள்ளார்.