Skip to main content

சிறுமிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; மேலும் ஒருவர் கைது! 

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
Tirupur Dt Udumalaipet nearest girls issue

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இத்தகைய சூழலில்தான் சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் எற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுமி 4 மாதம் கருவுற்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமிடம் விசாரித்துள்ளனர். அப்போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பகீர் தகவலை தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் இந்தச் சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 3 சிறுவர்கள் உட்பட ஜெய காளீஸ்வரன் (வயது 19), மதன்குமார் (வயது 19), பரணி குமார் (வயது 21), பிரகாஷ் (வயது 24), நந்தகோபால் (வயது 19) மற்றும் பவா பாரதி (வயது 22) என 9 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 

Tirupur Dt Udumalaipet nearest girls issue

அதில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 3 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 3 சிறுவர்களின் வயதுகள் முறையே 14, 15 மற்றும் 16 ஆகும். இந்தக் கொடூர சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுவர்கள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட நபர்கள் மேலும் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரிக்கப்பட்டதில் 13 வயதுடைய மற்றொரு சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் தனியார் விடுதியின் மேலாளர் சாமூவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே சிறுமியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிறுவன் ஒருவன் கோவை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சோப் ஆயில் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்