Skip to main content

“2.5 டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும்” - காவிரி நீர் ஒழுங்காற்று குழு!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
2.5 TMC Water must be opened Cauvery Water Management Committee 

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96 வது கூட்டம் குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொளி வாயிலாக இன்று (16.05.2024) நடைபெற்றது. அப்போது இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள், “கர்நாடகா அரசு சார்பில் மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 3.8 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தான் திறக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 6.2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். ஜூன் மாதம் 9.17 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் அதனையும் கால தாமதம் இன்றி திறக்க  வேண்டும்” என வலியுறுத்தினர்.

அதே சமயம் கர்நாடக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள், “கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவு பிறப்பிக்கு கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு மாநிலத்தின் வாதங்களையும் கேட்டறிந்த வினீத் குப்தா, “கர்நாடக அரசு காவிரியில் இருந்து மே மாத இருப்புப்படி 2.5 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் மே 21 ஆம் தேதி (21.05.2024) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். அதன் பின்னர் மீண்டும் இது குறித்து இரு மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதியாக தமிழகத்திற்கு எத்தனை டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்