Skip to main content

நியூஸ் க்ளிக் இணையதள நிறுவனர் கைது விவகாரம்; உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
Supreme Court Judgment for News Click website founder issue

டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி (03/10/2023) சோதனை மேற்கொண்டனர். நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து பணம் பெற்றதாகப் புகார் எழுந்ததால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களிலும் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பத்திரிகையாளர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த புகார் தொடர்பாகச் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா சட்டம் - UAPA) கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதனையடுத்து நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு டெல்லி போலீசார் சீல் வைத்திருந்தனர். மேலும் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனரும், ஆசிரியருமான பிரபிர் புர்கயஸ்தாவை டெல்லி போலீசார் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்தனர். இவருடன் நியூஸ் க்ளிக் ஊடகத்தைச் சேர்ந்த நிர்வாகி அமித் சக்கரவர்த்தி என்பவரும் கைது செய்யப்பட்டார்.

Supreme Court Judgment for News Click website founder issue

இந்நிலையில் பிரபிர் புர்கயஸ்தா கைது தொடர்பான வழக்கு இன்று (15.05.2024) விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், “பிரபிர் புர்கயஸ்தா கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் ஆகும். மேலும் அவரை உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததும் சட்டவிரோதம் ஆகும். எனவே பிரபிர் புர்கயஸ்தாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்