Skip to main content

வேறு கட்சிக்கு வாக்களித்த தாய்; ஆத்திரத்தில் மகன் செய்த வெறிச்செயல்!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
 Son's frenzy in anger! A mother who voted for a different party in andhrapradesh

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 13ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில், தான் கூறிய கட்சிக்கு வாக்களிக்காமல் வேறு கட்சிக்கு வாக்களித்த தாயை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரப் பிரதேச மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் கம்பதூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசலு. இவரது தாயார் சுங்கம்மா (52).  தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுங்கம்மாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்படி, சுங்கம்மாவின் மகனான வெங்கடேசலுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில், ஆந்திரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்குமாறு வெங்கடேசலு தனது தாயாரிடம் கூறியுள்ளார். ஆனால், சுங்கம்மா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் ஏறி அக்கட்சிக்கு வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. தான் கூறிய கட்சிக்கு ஓட்டு போடாமல், வேறு கட்சிக்கு தனது தாய் வாக்களித்ததை எண்ணி வெங்கடேசலு ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன் தினம், இந்த விவகாரம் குறித்து வெங்கடேசலு தனது தாய் சுங்கம்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். 

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிப்போக ஆத்திரமடைந்த வெங்கடேசலு, வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து சுங்கம்மாவின் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சுங்கம்மா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேசலுவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தான் கூறிய கட்சிக்கு வாக்களிக்கததால், தனது தாயை மகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்