Skip to main content

17 ஆண்டுகள் கொள்ளை; பறக்கும் திருடன் கைது

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
17 years robbery; Flying thief arrested

பொதுஇடங்கள், பேருந்துகள், ஏன் ஆட்டோக்களில் கூட திருட்டுச் சம்பவங்கள் நிகழ்வதை கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் நூதன முறையில் கடந்த 17 ஆண்டுகளாக விமானத்தில் பறந்து விமான பயணிகளைக் குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளது டெல்லியில் நிகழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து டெல்லி வழியாக விமானத்தில் அமெரிக்கா சென்ற மூதாட்டியைக் குறிவைத்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தீவிர விசாரணைக்கு பின்னரும் கொள்ளையில் ஈடுபட்டது யார் என்பது டெல்லி போலீசாரால் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் இருந்தது. இவ்வாறு தொடர்ந்து இதுபோன்று விமானப் பயணிகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக புகார்கள் குவிய, மேலும் தீவிரம் காட்டியது டெல்லி காவல்துறை.

பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு இறுதியாக ராஜேஷ் கபூர் என்பவரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். ராஜேஷிற்கு கபூரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்துவிட்ட அண்ணனுடைய ஆவணங்களைப் பயன்படுத்தி கடந்த 17 ஆண்டுகளாக விமானத்தில் பறந்து பயணிகளைக் குறிவைத்து திருடியது தெரிய வந்தது. குறிப்பாக முதியவர்களாக வரும் பயணிகளைக் குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அந்தப் பணத்தை பயன்படுத்தி டெல்லியில் ஹோட்டல்களில் அறை எடுத்து உல்லாசமாக தங்கி செலவு செய்ததும் தெரிய வந்தது.

கோட் சூட் உடைகளை அணிந்து தொழிலதிபர்களைப் போல தங்களைக் காட்டிக் கொண்டு விமானங்களில் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றியதும் உறுதிப்படுத்தப்பட்டது. விமானம் பறக்க ஆரம்பித்தவுடன் முதிய பயணிகளைக் குறி வைத்து அவர்களிடம் சென்று அவருடைய லக்கேஜை பாதுகாப்பான இடங்களில் வைக்க உதவி செய்வது போல் ஏமாற்றி திருடியதாக ராஜேஷ் கபூர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதே நேரம் தன்னுடைய பயண ஆவணங்களை வைத்து தன்னை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக இறந்துவிட்ட அண்ணனின் ஆவணங்களை பயன்படுத்தி போலியான ஆவணங்களை உருவாக்கி டிக்கெட்களை   வாங்கி விமானத்தில் பறந்துள்ளார்.

இப்படியாக கடந்த 17 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட முறை விமானங்களில் பயணித்து கொள்ளையில் ஈடுபட்ட திருடனை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்