Advertisment

அயோத்தி அரசியலால் பதவியை இழந்த இந்திய பிரதமர்!

vp singh arrest and ayodhya politics of bjp

vp singh arrest and ayodhya politics of bjp

Advertisment

1983 ஆம் ஆண்டுக்குப் பின், இன்று வரையிலும் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக இருந்துவருவது அயோத்தி விவகாரம். 1980 களுக்கு முன்னர் வரை அரசியல் கட்சிகளாலும், மத அமைப்புகளாலும் பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்த விவகாரம், இந்துத்துவ அமைப்புகளின் வளர்ச்சிக்குப் பிறகு இந்திய அரசியலில் மிக முக்கியமான விஷயமாக மாறிப்போனது. குறிப்பாக 1989 முதல் 1993 வரை இந்த விவகாரம் இந்திய அரசியலில் புயலைக் கிளப்பிக்கொண்டிருந்தது. இந்த அரசியல் புயலில் சிக்கி தனது பிரதமர் பதவியையே இழந்தார் வி.பி.சிங். 1989 ஆம் ஆண்டு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த வி.பி.சிங் தெலுங்கு தேசம் கட்சி, திராவிட முன்னேற்ற கழகம், அசோம் கண பரிஷத் மற்றும் இந்திய காங்கிரஸ் (சோசலிஸ்ட்) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பிரதமராகப் பதவியேற்றார். இந்த அரசுக்கு இடதுசாரிகள் மற்றும் பாஜக ஆகியவை வெளியிலிருந்து ஆதரவளித்தன.

இவர்களின் ஆதரவோடு வி.பி.சிங் பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு கூட ஆகாத நிலையில், ரத யாத்திரை சென்ற அத்வானியை பீகாரில் வைத்து கைது செய்ய உத்தரவிட்டது லாலுபிரசாத் தலைமையிலான அரசு. இது ஆர்.எஸ்.எஸ் கரசேவகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அக்டோபர், 30, 1990 அன்று பாபர் மசூதி இருந்த இடத்தை நோக்கிப் படையெடுத்தனர். நவம்பர், 2, 1990 அன்று உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த முலாயம் சிங் யாதவ் உத்தரவின்படி, அங்கு வந்த கரசேவகர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதன் காரணமாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக வி.பி.சிங் அரசுக்குக் கொடுத்துவந்த ஆதரவை வாபஸ் வாங்கியது பாஜக. அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதனையடுத்து சந்திரசேகர் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார். அதன்பின்பு, அயோத்தி பிரச்சனையில் பாஜகவை எதிர்த்து பிரச்சாரங்களில் ஈடுபட்ட வி.பி.சிங், பாபர் மசூதியைக் காப்பாற்றுவதற்காக மறியல் நடத்த முடிவெடுத்தார். ஆனால், அவரை தடுத்து நிறுத்தும் வகையில், அப்போதைய உத்தரப்பிரதேச பாஜக அரசு அவரை கைது செய்தது. இந்த கைது குறித்தும், அயோத்தியில் நடந்த அரசியல் குறித்தும் 9.11.1991 நக்கீரன் இதழில் வெளியான கட்டுரை.

வி.பி.சிங்.கைது விவகாரம். சரித்திரம் திரும்புகிறது.

சரியாக ஒருவருடம் முன்னால் வி.பி.சிங். அரசை அயோத்திப் பிரச்சனையைக் காரணம் காட்டி பாரதிய ஜனதாக்கட்சி கவிழ்த்தது. இப்போது உத்தரப் பிரதேச பா.ஜ.க. அரசைக் கவிழ்க்கக்கூடிய வாய்ப்பு வி.பி.சிங்குக்குக் கிடைத்திருக்கிறது.

Advertisment

அயோத்தியில் பாபர் மசூதியை அகற்றிவிட்டு ராமர்கோவில் கட்ட வேண்டும் என்று ரதயாத்திரை நடத்திய பா.ஜ.க.தலைவர் அத்வானியை அயோத்தியில் நுழையவிடாமல் அன்று கைதுசெய்ய உத்தரவிட்டது வி.பி.சிங். அரசு.

இந்த வாரம் அயோத்தியில் பாபர்மசூதியைக் காப்பாற்றுவதற்காக மறியல் நடத்தப் புறப்பட்ட வி.பி.சிங்கை பா.ஜ.க. அரசு கைது செய்திருக்கிறது.

அயோத்தி பிரச்சனை இந்தவாரம் மீண்டும் சூடுபிடித்திருக்க காரணம் தேர்தல்கள்தான்.

வரும் நவம்பர் மாதம் இந்தியாவின் பலமாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள 58 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 17 தொகுதிகள் இப்போது பா.ஜ.க. ஆட்சி நடத்தும் உ.பி மாநிலத்தில் இருக்கின்றன. அவற்றில் வெற்றி பெறுவதற்காக ராமஜென்ம பூமி விவகாரத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறது பா.ஜ.க.

ஆரம்பத்தில் ஜனசங்கம் என்ற பெயரில் இயங்கி பிறகு பாரதிய ஜனதாவாக மாறிய இந்தக் கட்சி 1952 முதல் 1984 வரை நடைபெற்ற எந்தப் பொதுத் தேர்தல்களிலும் பத்துசதவித வாக்குகள் கூடப் பெற்றது கிடையாது. 1952-ல் வெறும் 3.1 சதவிதம்தான். 1984 ல் இது 7.4 ஆக மட்டுமே உயர்ந்தது.

ஆனால் 1989-ல் நடந்த தேர்தல்களில் 11.4 சத வாக்குகளைப் பெற்றுவிட்டது. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அயோத்தி விவகாரம்தான். 1983 க்குப் பிறகுதான் அங்குள்ள பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர்கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை பலமாகப் பரப்ப ஆரம்பித்தார்கள்.

உண்மையில் ராமர் மீது பெரிய பக்தியோ இந்துமதத்தில் ஆழ்ந்த பிடிப்போ கூட பா.ஜ.க மற்றும் அதன் கிளைகளாக இயங்கிவரும் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வஹிந்துபரிஷத், பஜ்ரங்தளம் இவை எதற்கும் கிடையாது. அவர்களுடைய உண்மையான நோக்கம் தேர்தல்களில் லாபம் அடைவதும் முஸ்லிம்களை ஒழித்துக்கட்டுவதும்தான்.

இவர்கள் 1952 முதலே ஒவ்வொரு தேர்தலின் போதும் மதவெறியைக் கிளப்பிவிட்டு லாபமடையப் பார்ப்பது நடந்து வந்திருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மதக்கலவரங்கள் எல்லாமே தேர்தல் வருட காலங்களிலும் அதற்குச் சற்று முன்புள்ள காலத்திலும்தான் நடந்திருக்கிறது.

அறுபதுகளில் பசுவதை தடை என்று மதப்பிரச்சனையை ஜனசங்கமும் அதன் வகையறாக்களும் வடஇந்தியாவில் பெரிதாக எழுப்பின. முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்ணும் வழக்கம் உடையவர்கள் என்பதற்காகவே இதை பிரச்சனையாக ஜனசங்கம் எடுத்துக் கொண்டது.

இப்போதும் ராமர்கோவில் பிரச்சனை தேர்தலுக்காகவே பா.ஜ.க. வகையறாக்களால் கையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

1989 தேர்தலுக்கு முன்பு ராமர் கோவிலுக்கு அடிக்கல் விழா நடத்தினார்கள். 1990 ல் அத்வானி ரதயாத்திரை சென்றார். இந்த வார இறுதியில் ராமர் கோவில் பிரச்சனை மீண்டும் பெரிதாக்கப்படுகிறது. ஆனால் செப்டம்பர் கடைசி வாரத்தில் திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களில் அயோத்தி பற்றி ஒரு வார்த்தைகூட கிடையாது. ஏனென்றால் அப்போது இடைத்தேர்தல் அறிவிப்பு வரவில்லை.

ஒவ்வொரு வருடமும் வி.ஹெச்.பி.யும் பஜ்ரங்தளமும் அக்டோபர் நவம்பர் மாதங்களையே அயோத்தி விவகாரத்தைக் கிளப்புவதற்குப் பயன்படுத்துகின்றன. நவராத்திரி தசராவிழாவும், தீபாவளியும் இந்த மாசத்தில் நடப்பதும் இதற்குக் காரணம். பண்டிகைகளை ஒட்டி மக்கள் மனத்தில் பக்தியுணர்வு சற்று அதிகரிக்கும்போது அதையே பற்றிக்கொண்டு வெறியாக மாற்றமுடியும் என்று பா.ஜ.க.வால் கணக்கிடப்படுகிறது.

1989ல் செங்கல் சுமந்துசென்ற வி.ஹெச்.பி., இந்தவாரம் குழிதோண்டி பூமி பூஜை நடத்துவதாக அறிவித்து விட்டது. நடந்த பொதுத்தேர்தலில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்று பா.ஜ.க.வாக்குறுதி அளித்தது.

உ.பி மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துக் கொண்டபிறகு தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதாகக் காட்டிக் கொண்டால்தான் வருகிற இடைத்தேர்தலுக்கு உதவும் என்பதால் பாபர் மசூதியையும் சுற்றியுள்ள நிலங்களையும் தானே கையகப்படுத்துவதாக அக். 7 ஆம்தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நில விவகாரத்தில் பல பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன.

மாநில அரசாங்கம் நில ஆர்ஜித அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக கடந்த ஓராண்டு காலமாகவே வி.ஹெச்.பி. ஓசைப்படாமல் ஒருகாரியத்தில் ஈடுபட்டது. அயோத்தியில் பாபர் மசூதியைச் சுற்றியுள்ள நிலங்களில் பல சின்னச்சின்ன ஆனால் புராதானமான இந்துக் கோவில்கள் இருக்கின்றன. இந்தக்கோவில்கள் உள்ள நிலங்கள் எல்லாம் உண்மையில் அரசு புறம்போக்கு நிலங்கள்தான். ஆனால் காலப்போக்கில் கோவில் பூசாரிகளின் சொத்தாக ஆகியிருக்கின்றன. நிலங்களை சிறிது காலம் பயன்படுத்துவதற்கு அரசு அனுமதி தரும் வழக்கமும் இருந்து வருகிறது. இதுபோல சுற்றியுள்ள குட்டிக் கோவில் பூசாரிகளிடம் வி.ஹெச்.பி.சென்று லட்சக்கணக்கான ரூபாய்களைத் தந்து அவர்கள் அந்தக் கோவில்களை வி.ஹெச்.பி.நடத்தும் ராமஜென்ம பூமி டிரஸ்டுக்கு விற்பதாக எழுதி வாங்கியது. அதாவது கோவில்களை பூசாரிகள் விற்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தப் புதுமைக்கு வித்திட்டது விஸ்வ ஹிந்து பரிஷத். இதன்படி நாளை தமிழ்நாட்டின் புராதானமான புகழ்பெற்ற நடராஜர் ஆலயமான சிதம்பரம் கோவிலைக்கூட அதன் பரம்பரை சொந்தக்காரர்களான தீட்சிதர் குடும்பங்களிடம் பேசி சம்மதிக்க வைத்தால் யாராவது விலைக்கு வாங்கிவிடலாம். இங்கே பின்னி மில்லை உடையார் வாங்கியது போல.

வி.ஹெச்.பி.யின் திட்டம் சுற்றியுள்ள நிலத்தை இப்படி விலைக்கு வாங்கி அதில் மெல்ல ராமர் கோவில் கட்டட வேலையை ஆரம்பித்து விடலாம் என்பதுதான். அதற்காக வாங்கிய சின்னச்சின்ன கோவில்களை இடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

வி.பி.சிங் சட்டென்று இந்த விசயத்தைப் பிடித்துக் கொண்டு விட்டார்.

‘‘ராமர்கோவில் கட்டுவதற்காக பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மசூதியை இடிக்க விரும்புவது மட்டுமல்ல. இந்துக்கோவில்களையும் இடிக்கிறார்கள். இது என்ன நியாயம்? தவிர கோவிலை விலைக்கு விற்பது எப்படி சரியாகும்’’ என்ற கேள்விகளை எழுப்பினார். போராட்டத்தை ஆரம்பித்தார். தேசிய முன்னணி இடதுசாரிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த பல தலைவர்கள் வி.பி.சிங்குடன் சேர்ந்து அக்டோபர் 29 ம் தேதியன்று கைதாகியிருக்கிறார்கள்.

உ.பி.அரசு ஏழாம் தேதியன்று செய்த நில ஆர்ஜித அறிவிப்பையும் இவர்கள் கண்டித்திருக்கிறார்கள்.

நில ஆர்ஜிதத்துக்கான அவசியம் என்ன? இதில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி.யினரின் மூளை வேலை செய்திருக்கிறது.

நிலங்களை அரசு ஆர்ஜிதம் செய்வது செல்லாதென்று நீதிமன்றத்தில் தீர்ப்பானால் நிலங்கள் உரிமையாளர்கள் வசமே போய் சேரும். உரிமையாளர் விஸ்வ ஹிந்து பரிஷத்தினர்தானே? அதற்காகத்தானே குட்டிக்கோவில் பூசாரிகளிடம் லட்சக்கணக்கில் பேரம் பேசியிருக்கிறது!

‘‘நிலங்களை அரசு எடுத்துக் கொண்டது சரிதான் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அதுவும் பாரதிய ஜனதா வகையறாக்களுக்கு சாதகம்தான். அரசாங்கமே பா.ஜ.க.அரசுதானே.’’ அதுவே பிறகு நிலத்தை ராமஜென்ம பூமி டிரஸ்ட்டிடம் கோவில் கட்டுவதற்காகக் கொடுத்துவிடலாம். எப்படிப் பார்த்தாலும் லாபம் என்றே கணக்குப் போட்டிருக்கிறார்கள்.

இந்த மோசடி வேலையில் மிகப்பெரிய மோசடியாக பாபர் மசூதி உள்ள நிலத்தையும் சேர்த்து அரசாங்கம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

இதற்காக ஒரு உத்தியைக் கையாண்டார்கள். நிலங்களின் சர்வே எண்களை அரசு ஆணையில் குறிப்பிடும்போது மோசடி செய்தார்கள். ‘‘பாபர் மசூதி வளாகத்தில் முன்பு செங்கல் விழா நடத்தப்பட்ட இடம் உட்பட சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ள அந்த நிலத்தில் யாரும் ஏதும் செய்யமுடியாது’’ என்று நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருக்கிறது.

எனவே இப்போது சர்வே எண்களைக் குறிப்பிடும் போது இதுவரை நீதிமன்ற வழக்குகளில் குறிப்பிடப்பட்டு வருகிற தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிற அரசுப் புறம்போக்கு நிலங்கள் தொடர்பாக உள்ள பிளாட் எண்களை பயன்படுத்தாமல் ‘ரெவின்யூ சர்வே’ எண்களைக் குறிப்பிடுகிறார்கள். இதன்படி வாடகை நில பிளாட் எண் 583 என்றிருந்தால் அது ரெவின்யூ சர்வே எண் படி 146,158,160 என்று மூன்றாகப் பிரிந்திருக்கக் கூடும்.

சர்வேயை இப்படிக் குழப்பியடித்து பாபர் மசூதியைச் சுற்றியுள்ள நிலங்களை மட்டுமல்ல, பாபர் மசூதி உள்ள நிலத்தையும் சேர்த்து கையகப்படுத்தி விட்டதாக பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது.

அரசாணையில் கையகப்படுத்தியதன் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதோ சுற்றுலா வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாவை ஊக்குவிப்பதாகும்.

ஆனால், பா.ஜ.க. முதலமைச்சர் கல்யாண்சிங் சென்னையில் நிருபர்களிடம் பேசும்போது ராமர் கோவில் கட்டுவதற்காக நிலத்தை வி.ஹெச்.பி.யிடம் கொடுத்து விட்டதாகவே கூறினார்.

இப்படியெல்லாம் தந்திரமாக வேலைகள் செய்தும்கூட பா.ஜ.க. வகையறாக்களின் திட்டத்தில் சிக்கல்கள் வந்துவிட்டன.

எந்தெந்த குட்டிப் பூசாரிகளிடம் குட்டிக் கோவில்களை வாங்கினார்களோ, அவர்களோடே தகராறு ஏற்பட்டுவிட்டது. குட்டிக் கோவில்களை இடிப்பதை அந்த பூசாரிகளில் பலர் ஒப்புக் கொள்ளவில்லை.

அவற்றில் ஒரு கோவில் 150 வருடங்களாக இருப்பதாகும். அதையும் இடிக்க வேண்டும் என்கிறது வி.ஹெச்,பி.

இன்னொரு பக்கம் அயோத்திப் பிரச்சனையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அரசு சீக்கிரமே ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது.

பா.ஜ.க.வின் மதவெறிக்கு எதிராக வி.பி.சிங்கும் இடதுசாரிகளும் களத்தில் குதிக்கும்போது காங்கிரஸ் ஒதுங்கி இருப்பது அதன் அரசியலுக்கு லாபமனதாக இல்லை.

ஏற்கெனவே பஞ்சாப்பில் பிரச்சனை கடுமையாக உள்ள நிலையில் பஞ்சாப் தீவிரவாதத் தலைவரான சிம்ரன் ஜித் சிங் மான் ‘‘முஸ்லிம்களுக்கு ஆதரவாக பாபர்மசூதியைக் காப்பாற்ற அயோத்திக்கு சீக்கியர்கள் அணிவகுப்பார்கள்’’ என்று அறிவித்திருக்கிறார்.

சாமார்த்தியமாக பிரதமர் நரசிம்மராவ் அயோத்தி விவகாரத்தில் உள்ள சிக்கல்கள் பற்றி விவாதிப்பதற்கு தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் கூட்டம் வருகிற சனிக்கிழமையன்று நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இடைத்தேர்தல் முடிவதற்கு முன்பாக இதை நடத்தக்கூடாது என்று பா.ஜ.க.எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் அந்தக்கூட்டத்தில் சமரசத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டிவந்தால் தேர்தல் லாபம் போய்விடும் என்ற கவலைதான்.

வெகுவிரைவாக அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் லாபம் பா.ஜ.கவுக்குதான். தொடர்ந்து மதவெறியைத் தூண்டிவிட்டு பல தேர்தல்களுக்கு லாபம் அடைய உதவியாகி விடும். மதவெறியின் உச்சம் இப்போது கிரிக்கெட்டையும் தொட்டுவிட்டது. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடக்கூடாது என்று வன்முறையைக் காட்டி மிரட்டிய சிவசேனாவும் இந்து முன்னணியும் வெற்றியடைந்திருக்கின்றன. தொடங்கவிருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்தாகி விட்டன.

பாரதியஜனதா தலைவர்களை தேசியபாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே போட வேண்டும் - சுப்பிரமணியன் சாமி

பரபரப்புக்குப் பெயர்போனவரான முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சாமி ‘‘ராமஜென்ம பூமி பிரச்சனையில் தேசவிரோதமாக நடந்து கொள்ளும் எல்லா பாரதிய ஜனதா தலைவர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளே வைக்க வேண்டும்’’ என்று கோரியிருக்கிறார்.

இந்து மதத்தின் மீது பக்தி எதுவும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கோ பா.ஜனதாவுக்கோ அவர்களுடைய மற்ற முன்னணியினருக்கோ கிடையாது. 1925-ல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., ராமஜென்மபூமியில் அக்கறைகாட்டியது 1984ல் தான். அரிஜனங்களை மேல்ஜாதியினர் கொல்லும்போது அதை தடுக்க ஆர்.எஸ்.எஸ்.முற்பட்டதில்லை. உடன்கட்டை ஏறுவதைக் கண்டிக்க முன் வந்ததில்லை. இந்து மதக் கோளாறுகளை சீர்திருத்துவதில் ஈடுபட்டதும் இல்லை.

இதே உத்தரப்பிரதேசத்தில் 1967-68 ல் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். 1977 -79 ல் டெல்லியில் அமைச்சர்களாக இருந்தார்கள். அப்போது பாபர் மசூதி பற்றிப் பேசியதே இல்லை. இப்போது பேசுவதன் ஒரே காரணம் தேர்தல் லாபமும் அதிகார வெறியும்தான்.

‘‘முஸ்லிம்களுக்கு பாதகமாக இருத்தல்தான் இந்து மதத்தின் நன்மைக்கான செயல்’’ என்பது அவர்கள் முடிவு. அதனால்தான் முஸ்லிம்கள் உள்ள பகுதிகளில் மட்டுமே தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறார்கள்.

அயோத்தி விவகாரத்தில் 1989 செப்டம்பர் 27 ஆம் தேதியன்று அரசாங்கத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் விஷ்வ ஹிந்து பரிசத், லக்னோ நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டபடி சர்ச்சைக்குரிய நிலப்பகுதியில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதை மீறி நடப்பதற்காக பரிஷத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரதிய ஜனதா தலைவர்களை என்.எஸ்.ஏ. சட்டத்தில் கைதுசெய்து விட்டு, ஆர்.எஸ்.எஸ்.மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து விஸ்வ ஹிந்து பரிஷத்தை இரண்டு வருடங்களுக்கு தடைசெய்தால் போதும். ஒன்றும் குடிமுழுகிப்போய் விடாது.

App exclusive Ayodhya Ram mandir
இதையும் படியுங்கள்
Subscribe