Advertisment

கொடநாடுக்கு முன்பே ஜெ-வை கவர்ந்த இரண்டு எஸ்டேட்கள்!

Two estates that impressed Jayalalithaa before Kodanad!

பதவியில் இருக்கும்போதே சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது சொத்துக்களில் மிக முக்கியமாக மக்களிடையே கவனம் பெற்றவை நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டும், அதில் பிரம்மாண்டமாக அமைந்திருந்தபங்களாவும் தான். ஜெ.வின் மறைவிற்கு பிறகு பங்களாவில் உள்ள முக்கிய ஆவணங்கள் மாயமானது, பல கொலை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது என மர்மங்கள் நிறைந்த இடமாக உள்ள கொடநாடு எஸ்டேட்டை ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக முதன் முறையாகப் பொறுப்பேற்ற பின்னர் 1994ஆம்ஆண்டு வாங்கினார். அதற்கு முன்பாகவே ஜெயலலிதாவும் சசிகலாவும் இணைந்து வாங்குவதாகத் திட்டமிட்டிருந்த சொத்துகள் பற்றி 11.06.1992 தேதியிட்ட நக்கீரன் இதழில் செய்தி வெளியானது.

Advertisment

Two estates that impressed Jayalalithaa before Kodanad!

ஊட்டியில் நடனமாடிய ஜெயலலிதா களைப்புத் தீர அங்கேயே இரண்டு நாள் ஓய்வெடுப்பார் என்றுதான் முதலில் கூறப்பட்டது. ஆயினும் பதினெட்டாம் தேதி விடியற்காலை தன் தோழி சசிகலா மற்றும் செங்கோட்டையனுடன் குன்னூர் சென்ற ஜெ,சசி&கோ திரும்பும் வழியில் நான்கைந்து கார்களோடு அந்த மலையகப் பனிக்குள் மாயமாய் மறைந்து விட்டார்கள்.

வழிநெடுக காவலுக்கு நின்ற காவலர்களுக்குப் பலத்த அதிர்ச்சி. சி.எம். எங்கே மாயமாய் மறைந்தார்?

Advertisment

அவர்களுக்குக் கூடத் தெரியாமல் ரகசியமாய் தன் மர்மப் பயணத்தை வகுத்திருக்கிறார் ஜெயலலிதா.

என்றாலும் என்ன? ‘‘மெல்ல மெல்லப் பனி விலகுவது போல ‘ஜெ’ யின் இந்த ரகசியப் பயணமும் மெல்ல மெல்ல’’ வெளி உலகுக்குத் தெரிய வந்தது.

இடையில் சில மணி நேரங்கள் ‘ஜெ’ காணாமல் போனது குறித்துப் பரபரப்பாய் பேசிக்கொண்ட ஊட்டி வாசிகளின் பேச்சில் ‘‘கிரேக் மோர், டெரஸ்’’ என்ற இரண்டு வார்த்தைகள் அடிக்கடி அடிபட்டன.

எங்குச் சென்றார் ஜெ? மக்களிடம் ஏன் இந்த ரகசியப் பரபரப்பு? நாம் விசாரணையில் இறங்கினோம்.

குன்னூர்ல இருக்கிற அரசுக்குச் சொந்தமான டாண்டீ (TANTEA) கம்பெனிக்குத்தான் சி.எம்.போறதா எங்களுக்குத் தகவல். ஆனா போய் திரும்புற வழியில் யாருமே எதிர்பாராமல் காரெல்லாம் திடுதிப்புன்னு ‘கிரேக் மோர்’ போயிடுச்சி.

குண்டும் குழியுமான அந்த எஸ்டேட் பாதையில் செக்யூரிட்டி போடாததால் எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாயிடுச்சி! சி.எம். ஏன் அந்த எஸ்டேட் போனாங்கன்னு! இன்னும் தெரியல என்று போலீஸ் வட்டார தகவல் கிடைத்ததும் நாம் சுறுசுறுப்பானோம்.

அதன்பின் நமக்குக் கிடைத்த தகவல்கள் மூலம் ஜெயலலிதாவின் ரகசியப் பயணத்தின் நோக்கம் தெரிய வந்தது. அது நம்மை மாபெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நீலகிரியிலேயே கெடுபிடி நிறைந்த மூன்று எஸ்டேட்டுகளில் இந்த ‘கிரேக் மோர்’ எஸ்டேட்டும் ஒன்று என்பது நமக்குத் தெரிய வந்தது. எனவே அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் சாதுரியமாகத் தகர்த்து விட்டு எஸ்டேட்டுக்குள் நுழைந்தோம்.

எப்படி இவ்வளவு தூரம் யார் கண்ணிலும் படாமல் வந்தீர்கள்! என்று நம்மைக் கண்டதும் அதிசயித்த சில தொழிலாளர்கள் ‘‘அதிகாரிகள் வந்தால் உங்களைத் தண்டிப்பதோடு உங்கள் பொருட்களையும் அபகரித்துக் கொள்வார்கள். வந்தது போலவே திரும்பி விடுங்கள்’’ என்று பலத்த அக்கறையோடு கூறினார்கள்.

நின்று பேசவே பயந்த அவர்களோடு மெல்ல மெல்லப் பேச்சை வளர்த்த போது, ‘‘இந்த எஸ்டேட் முதலாளி ஏதோ வெளிநாட்டுல இருக்காங்கன்னு மட்டும் தெரியும். இப்போ இன்சார்ஜ் எலாம் ஜி.எம்.ஐயாதான். நாங்களும் ஆரம்பத்திலருந்து பாக்குறோம். இந்த நிர்வாகம் ஒரு மிலிட்டரி முகாம் மாதிரிதான் எஸ்டேட்டை வச்சிருக்கு’’ என்றனர்.

அவர்களின் ஆரம்பத் தயக்கம் தெளிந்த வேளையில் ஜெயலலிதாவின் ‘‘மர்ம விஸிட்’’ பற்றி விசாரித்தோம்.

மொதல்ல செங்கோட்டையன் அரங்கநாயகம் எல்லாம் வந்து பாத்துட்டுப் போனாங்க.அப்புறம் அன்னிக்குப் பாத்தா நாலஞ்சி காருல திடீர்னு ஜெயலலிதா வந்து இறங்க்குச்சி. ரெண்டுமணி நேரம் எஸ்டேட்டை சுத்திப் பாத்துட்டு அப்புறம் எல்லோரும் போனாங்க. இந்த எஸ்டேட்டை ஜெயலலிதா வாங்கிட்டதா எங்க ஆபீஸ்லயே பேசிக்கிறாங்க....உண்மையா? என்று அப்பாவித்தனமாக நம்மிடம் கேட்டனர்.

கிரேக் மோர் எஸ்டேட் வந்த அம்மா;சின்னம்மா அன்&கோ அடுத்து ‘‘டெரஸ்’’ என்ற எஸ்டேட்டுக்கு படையெடுத்திருக்கிறது.

ஊட்டி கூடலூர் பாதையில் டி.ஆர்.பஜார் என்ற இடத்திலிருந்து பிரிந்து செல்லும் வழியில் எட்டாவது கிலோமீட்டரில் உள்ள ‘டெரஸ்’ எஸ்டேட் தொழிலாளர்களைச் சந்தித்த போது, ‘‘அந்த செங்கோடந்தாங்க முதல்ல வந்தாரு. (செங்கோட்டையனை செங்கோடன் என்றே அவர்கள் குறிப்பிடுகின்றனர்) அப்புறம் செங்கோடன் ஜெயலலிதா எல்லாம் வந்தாங்க. எஸ்டேட்டை அந்தம்மா வாங்குதாம். எத்தனையோ கோடிக்குப் பேசி முடிச்சாச்சுன்னு சொல்றாங்க. எதுக்கும் ஐயா கோயமுத்தூர்ல இருக்காரு, அவருகிட்டயே கேட்டுப் பாருங்க’’ என்றனர்.

ஆக நமது முதல் கட்ட விசாரணையிலேயே ஜெ,சசி ‘க்ரூப்’ கிரேக் மோர், டெரஸ் இரண்டு எஸ்டேட்களுக்கும் ரகசியப் பயணம் மேற்கொண்டது உறுதியானது.

அடுத்தகட்டமாக சம்பந்தப்பட்ட எஸ்டேட்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டோம். ‘‘ஆள் இல்லை.ராங் நம்பர்’’ என்ற பதில்களே தொடர்ந்து வந்தன.

அதன்பின் ஆளும் கட்சி மேல்மட்டங்களை ரகசியமாக அணுகினோம். மிகுந்த தயக்கத்தோடும் தங்களைக் காட்டிக் கொடுத்து விடக் கூடாது என்ற நிபந்தனையோடும் விவரித்த செய்திகள்;

‘‘நல்ல தேயிலை எஸ்டேட் ஒன்று வாங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் நெடுநாளைய உள்நோக்கமே ஊட்டி மலர்க் கண்காட்சி விஸிட்டின் அடிப்படைக் காரணம்.

34௦௦ ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கிரேக்மோர் எஸ்டேட்டின் சொந்தக்காரர் சிவதட்சாயணி லண்டனில் வசிக்கிறார். ரூபாய் நாற்பத்தெட்டு கோடிக்கு விலை பேசப்பட்ட இந்த எஸ்டேட் ஜெயலலிதா சார்பில் நாற்பத்திரெண்டு கோடி வரை விலை பேசப்பட்டு இருக்கிறது.

எல்.ஜி.நித்யானந்தம் என்ற கோவை நபருக்கு சொந்தமான டெரஸ் எஸ்டேட் செங்கோட்டையனுக்காக விலை பேசப்பட்டதாம். ஆயிரம் ஏக்கரில் எண்ணூறு ஏக்கர் பட்டா பூமியான இந்த எஸ்டேட் ஒன்பது கோடி ரூபாய்க்கு விலை படிந்துள்ளதாம். இதில் ஐந்து கோடியை நேரடியாகவும் மீதி நான்கு கோடியை பேங்க் மூலம் மாதாமாதம் கட்டி விடவும் ஏற்பாடாம்.

எஸ்டேட் இரண்டும் வாங்கப்பட்டு விட்டதா இல்லையா? என்ற தீர்மானமான கேள்விக்கு விலையை கேட்டுட்டு வாங்கலாமா வேண்டாமான்னு யோசிக்கறதா கேள்வி; என்னவா இருந்தாலும் உண்மை சீக்கிரம் வெளிவந்து விடும்’’ என்றார் நீலகிரியின் பழுத்த அரசியல்வாதி ஒருவர்.

கோடி கோடியாய் இந்தியா வெளிநாட்டில் கடன் வாங்கி தன் குடிமக்களைக் கடன்காரர்களாய் வறுமையில் வாடவிடும் இந்த நேரத்தில் ஜெயலலிதா செங்கோட்டையன் ஆகியோர் ஐம்பத்தி ஒரு கோடி மதிப்புள்ள இந்த எஸ்டேட்டுகளை வாங்கி இருந்தாலும் சரி, வாங்குவதாக இருந்தாலும் சரி, நமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் ‘‘பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’’ என்னும் பழமொழிதான்.

ஜெயலலிதாவின் ஊட்டி விஸிட்டில் கிடைத்த லேட் சுவாரசியங்கள்;

அரசு விழாக்களில் ஜெயலலிதா தன் ஆடம்பரத்தால் அநியாயமாய் மக்கள் பணத்தை வீணடிக்கிறார் என்று எதிர்க் கட்சியினர் ஆர்ப்பரிப்பதினாலோ என்னவோ இந்த விஸிட்டில் தன் கைப்பணத்தைத் தாராளமாக அள்ளி வீசியிருக்கிறார் ஜெயலலிதா.

துப்புரவுத் தொழிலாளர்கள் வழிநெடுக காவலுக்கு நின்றவர்கள் எனப் போகிற போக்கில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் இரண்டாயிரம் என்று பணத்தைத் தண்ணீராக வாரி வழங்கி இருக்கிறார் ஜெயலலிதா.

ஊட்டி சேட் ஒருவர் பெரிய கலர் டி.வி. இரண்டை ‘ஜெ’வின் பொழுதுபோக்குக்காகக் கொடுத்திருக்கிறார்.

டி.வி. கொடுத்தவரிடம் திரும்பிப் போகவில்லையாம்.

jayalalitha Kodanad Estate sasikala
இதையும் படியுங்கள்
Subscribe