சங்கம்... சங்கடம்!

மிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி... தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டுப் போட்டார்கள் அதிருப்தி தயாரிப்பாளர்கள். அந்த பூட்டை உடைக்க முயன்ற விஷாலை போலீஸார் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுசென்றனர்.

"விஷாலும் அவரது அணி சார்பில் நிர்வாகிகளாக இருப்பவர்களும் உடனடியாக சங்கத்தை விட்டு விலகவேண்டும். இடைக்கால நிர்வாகம் மூலம் நாங்கள் நிர்வகிப்போம்...' என கோஷம் எழுப்புகிறது அதிருப்தி தயாரிப்பாளர்கள் அணி.

இதுபற்றிய விசாரணையில் நமக்கு ஏராளமான தகவல்கள் கிடைத்தன.

Advertisment

அது... இதோ...

vishal

சவால்... திவால்!

Advertisment

"திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் "தமிழ் ராக்கர்ஸ்' இணையத்தை ஒழித்தே தீருவேன்'’ என விஷால் சவால் விட்டிருந்தார். ஆனால் அந்த சவாலுக்குப்பின் தமிழ் ராக்கர்ஸ் முன்னிலும் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் விஷாலின் சவால் திவாலாகிவிட்டது. அரசாங்க உத்தரவு, நீதிமன்ற உத்தரவுகளாலும்கூட திருட்டு வெளியீட்டை தடுக்க இயலாதபோது... ‘"ஏன் தடுக்க முடியல... ஏன்னா விஷாலும் தமிழ் ராக்கர்ஸோட கூட்டணி'’ என காரணம் சொல்லியிருக்கிறார்கள் விஷாலின் எதிர் தரப்பினர்.

நிதி... விதி!

தயாரிப்பாளர் சங்க வைப்பு நிதியை அவ்வளவு எளிதில் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகளால் எடுத்துவிட முடியாது. அந்த நிதியை கையாள கடுமையான சங்க விதிகள் இருக்கின்றன. ஆனாலும் "ஏழு கோடியை கையாடல் செஞ்சுட்டார் விஷால்'’என எதிரணி குற்றம் சொல்கிறது. "அந்த நிதி உட்பட எல்லா விஷயங்களுக்கும் கணக்கு-வழக்குகள் இருக்கின்றன. அதை சந்தேகம் இருப்பவர்கள் பார்த்துக்கொள்ளலாம்...' என விஷால் தரப்பில் சங்க செயலாளர் கதிரேசன் சொல்லியும்... எதிரணி தங்கள் புகாரில் உறுதியாக உள்ளது.

ரெகுலேஷன்... இர்ரெகுலேஷன்!

vishal"சிறிய படங்கள் வெளியீட்டில் பாதிப்பு ஏற்படக்கூடாது' என்பதற்காக ‘"ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி'யை தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஏற்படுத்தினார் விஷால். ஆனால்... பெரிய நடிகர்களின் படங்கள் விதியை மீறி திடீரென ரிலீஸ் தேதி அறிவித்ததால் பல குழப்பங்கள் நடந்தன. தனுஷ், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி உட்பட பல ஹீரோக்கள் இதில் விஷாலோட முரண்பட்டதையும், அதன் பஞ்சாயத்துகளையும்... டிசம்பர் 15-18 தேதியிட்ட நமது இதழில்... "எப்படியோ போங்க -எரிச்சலில் விஷால்'’என்ற தலைப்பில் விலாவாரியாக சொல்லியிருந்தோம்.

வரும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கலுக்கு தயாரிப்பாளர்கள் தங்கள் இஷ்டம்போல தங்கள் படங்களை வெளியிட்டுக்கொள்ளலாம். "பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் படங்களை ரிலீஸ் ரெகுலேஷன் கமிட்டி ஒழுங்குபடுத்தும்'’என அறிக்கையில் தயாரிப்பாளர் சங்கமும், பிரஸ்மீட்டில் விஷாலும் சொல்லியிருந்தனர். இதையும் நாம் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

"கிறிஸ்துமஸுக்கும், பொங்கலுக்கும் இஷ்டம்போல ரிலீஸ் பண்ணலாம்னு விஷால் எடுத்த முடிவுக்குப் பின்னால விஷாலோட சுயநலமும் இருக்கு'’என்பது எதிரணியினரின் குற்றச்சாட்டு.

அதென்ன சுயநலம்?

கன்னட சினிமாவில் இளம் நடிகர்களில் தொடர்ந்து ஹிட் படங்களைத் தந்துவரும் ஹீரோ யாஷ், விஷாலின் நெருங்கிய நண்பர். இவர் நடிப்பில் 1980-களின் பீரியட் ஃபிலிமாக கோலார் தங்கவயல் பின்புலத்தில் பெரிய செலவில் தயாராகியிருக்கும் படம் "கே.ஜி.எஃப்'. இந்தப் படத்தின் தமிழ் மொழியாக்கத்தை தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை விஷாலின் "விஷால் ஃபிலிம் ஃபேக்டரி'’பெற்றுள்ளது. விஷாலின் செல்வாக்கால் தமிழின் பெரிய ஹீரோக்களின் படங்களுக்குப்போல இந்தப் படத்திற்கு தமிழகத்தின் திரையரங்குகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. சென்னையில் மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உட்பட 300 தியேட்டர்கள் கிடைத்துள்ளன. ’தான் வெளியிடும் இந்தப் படத்திற்காகத்தான் "கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கலில் இஷ்டம்போல... இர்ரெகுலேஷனாக படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம்னும், பொங்கலுக்குப் பிறகு ரெகுலேஷன் கடைப்பிடிக்கப்படும்னும் விஷால் போட்ட ரூல்ஸை சுயநலத்தோட விஷாலே உடைச்சிருக்கார்'’என்கிறார்கள் எதிரணியினர்.

ராயல்டி... டகால்ட்டி!

இளையராஜா தனது செல்போன் காலர் ட்யூனாக தனது பாடல் ஒன்றை வைத்திருந்தார். அந்த செல்போன் நிறுவனமோ... ‘"நீங்க பயன்படுத்துற காலர் ட்யூனுக்கு கட்டணம் செலுத்துங்க'’ என்றது. "என் பாட்டுக்கு நான் பணம் கட்டணுமா?'’என கோபமான ராஜா... தனது இசைப் பாடல்களை மேடையிலும், செல்போனிலும், தொலைக்காட்சியிலும், வானொலியிலும்... இன்னும் பல வகைகளிலும் பயன்படுத்த நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி, ராயல்டி உரிமையை பெற்றார். பணம் வாங்காமல் நல்ல விஷயங்களுக்காக தனது பாடல்களை பயன்படுத்தும் கச்சேரிக்காரர்கள் தனக்கு ராயல்டி தரத் தேவையில்லை’ என்று விதிவிலக்கும் அளித்தார் ராஜா. அந்த ராயல்டி தொகையை வசூலிக்கும் உரிமையையும் தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு வழங்கினார். இதன்மூலம் அந்த தொகையில் இசைக்கலைஞர்களும் பயன் பெறுவர். ஆனால் இதற்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து எதிர்க்குரல் கிளம்பியது.

vishal"எங்கள் படத்திற்கு இசையமைக்க உங்களுக்கு நாங்கள் பணம் தந்தோம். அதனால் உங்கள் ராயல்டியில் எங்களுக்கும் பங்கு வேண்டும். இல்லையென்றால்... எங்களுக்கும் தனியாக ராயல்டி வாங்கிக்கொடுங்கள்'‘என எதிர்க்குரல் கொடுத்தது.

"ஒரு படத்திற்கு இசையமைக்க பணம் வாங்கிக்கொண்டாலும்... அந்தப் படம் மொழிமாற்றம் ஆகும்போதோ... சேனல்களுக்கு விற்கும்போதோ, டி.விடி.க்கு விற்கும்போதோ... அந்தத் தொகை தயாரிப்பாளர்களுக்கே சேர்கிறது. அல்லது அந்தப் பட உரிமை வைத்திருப்பவர்களுக்கே சேர்கிறது. அதில் இசையமைப்பாளருக்கு பங்கு இல்லை. இசையை தனியாக பயன்படுத்துவதற்குத்தான் ராஜா ராயல்டி கேட்டுள்ளார். அதில் எப்படி தயாரிப்பாளர்களுக்கு பங்கு தர முடியும்?'’என்பது ராஜா தரப்பினரின் கேள்வி. இதனால் தயாரிப்பாளர்களிடையே இளையராஜா மீது அதிருப்தி. ராஜாவின் ராயல்டி விஷயத்தில் நியாயம் இருந்ததாக நினைத்ததால்... தயாரிப்பாளர்களின் அதிருப்தியை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலோ, சங்க நிர்வாகிகளோ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அதே சமயம்... இளையராஜா மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெரும் நிதி திரட்டும் முயற்சியை மேற்கொண்டார் விஷால். இது கலைப்புலி தாணு, தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தபோதே... பரிசீலனையில் இருந்த ஒரு விஷயம்தான். அதை இப்போது விஷால் தீவிரமாக முன்னெடுத்திருக்கிறார். ‘"இளையராஜா-75'’ என்ற பெயரில் ராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதோடு... பெரிய அளவில் இன்னிசை விழாவாக நடத்தி... அதன் மூலம் பத்துகோடி ரூபாய்க்கும் மேல் நிதி வசூலிக்கவும், அந்த நிதியில் நலிந்த தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு இடம் வாங்கித் தரவும் முடிவுசெய்தார் விஷால். இதை அதிகாரப்பூர்வமாக சங்கமும் அறிவித்தது.

"பாடல் ராயல்டி விஷயத்தில் தயாரிப்பாளர்களை புறம்தள்ளிய இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் பாராட்டுவிழா நடத்துவதா?'’என குரலெழுப்பினர் விஷாலின் எதிரணியினர். குறிப்பாக... "என் நண்பன்தான்... ஆனா... தயாரிப்பாளர்களை கண்டுக்காத அவனுக்கு எதுக்கு தயாரிப்பாளர் சங்கம் பாராட்டுவிழா நடத்தணும்'’என விஷாலின் எதிரணியினரிடம் கருத்து தெரிவித்திருக்கிறார் டைரக்டர் பாரதிராஜா.

ஆனால்... ‘"ராஜா விழாவுக்கான எதிர்ப்பு என்பது... ராயல்டி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல... இந்த நிகழ்ச்சி மூலம் திட்டமிட்ட நிதி திரட்டப்பட்டு... நலிந்த தயாரிப்பாளர்களுக்கு இடம் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டால்... வரும் மார்ச் மாதம் நடைபெறும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் மீண்டும் விஷால் டீம் ஜெயித்துவிடும் என்பதால்தான்... இப்படி ராயல்டியை காரணம் காட்டி டகால்ட்டி பண்ணுகிறார்கள்'’என்பது விஷால் ஆதரவாளர்களின் குரல்.

சொன்னது... சொல்வது!

"விஷால் ஒரு தயாரிப்பாளராக மட்டும் இருந்தால் இவ்வளவு பிரச்சினை இருக்காது. ஒரு நடிகராகவும் இருப்பதால்... தயாரிப்பாளர் சங்கத்தின் பேரில் அவர் எடுக்கும் நடவடிக்கைகளை மற்ற ஹீரோக்களால்... பிரபலங்களால் ஈகோ காரணமாக ஏற்க முடியவில்லை'’ என ‘"எப்படியோ போங்க'’கட்டுரையில் சொல்லியிருந்தோம்.

"ஒரு நடிகர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு தலைவராக இருக்கக்கூடாது'’என விஷாலின் எதிர்ப்பாளர்களில் முக்கியமானவரும், தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஏ.எல்.அழகப்பன் குரல் உயர்த்தியுள்ளார்.

பாலிடிக்ஸ்... பஞ்சாயத்து!

இப்படி... விஷாலுக்கு ஆதரவாகவும், விஷாலுக்கு எதிராகவும் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்... ஆளும்கட்சியின் அதிகார அரசியல் விளையாட்டு இந்த களேபரத்தின் காரணகர்த்தாவாக இருக்கிறது.

அரசையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் விஷால். அதே சமயம் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமானவராக இருந்து அவருக்கு ஆதரவாகவும் பேசிவருகிறார் விஷால்.

ஆளும்தரப்பு ஆதரவு சேனலான "நியூஸ் ஜெ.'’ துவக்கப்பட்டபோது... "மாதச் சம்பளம் வாங்குகிறவர்களுக்கு சேனல் தொடங்குகிற அளவுக்கு ஏது பணம்?'’என விஷால் கேள்வி எழுப்பினார். "சேனலும், பத்திரிகையும் நடத்துற உன் ஃப்ரெண்ட்டக் கேளு (தினகரனை) நல்லாக் கேளு... விஷமப் பயலே'’என விஷாலை வெளுத்தது "நமது அம்மா'’பத்திரிகை. கூடவே "ஒரு வீட்டிற்கு நள்ளிரவு சென்று அதிகாலையில் விஷால் சுவரேறி குதித்தார்...'’என பாலியல் ரீதியாக விஷால் பற்றி ஒரு நியூஸ் போட்டது ‘"நியூஸ் ஜெ.'

"சட்டமன்றத் தேர்தல் வரட்டும். எதிர்பார்த்து காத்திருக்கேன்'’என ஒரு பதிலடி தந்தார் விஷால்.

இப்படி ரொம்பநாளாகவே மந்திரிசபையோடு மல்லுக்கட்டுகிறார் விஷால்.

"திரையரங்கத்தில் வெளியாகும் ஒரு படத்தின் வசூல் நேரடியாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு தெரியும்படி கம்ப்யூட்டர் மயமாக்கவேண்டும்...' என்பது விஷாலின் திட்டம். இதற்கு எல்லோரும் ஒப்புக்கொண்டுவிட்டனர். பலத்த ஆலோசனைக்குப் பிறகு... தமிழக தியேட்டர் அதிபர்கள் சங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது. இது சம்பந்தமாக கடந்த மார்ச் மாதமே அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்துப் பேசினார்கள். திரையரங்க வசூலில் அரசுக்கு கேளிக்கை வரி செல்வதால்... கணினிமயமாக்குதலுக்கு ஜி.ஓ. வெளியிட வேண்டும். ஆனால் விஷால் மீதான கோபத்தில்... இதன் மூலம் விஷாலுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக்கூடாது என்பதால்... அரசாங்கம் இழுத்தடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

"நியூஸ் ஜெ'’பொறுப்பாளர் சக்ஸேனா, ஜே.கே.ரித்தீஷ் போன்ற அ.தி.மு.க.வினரும், நடிகர்சங்க பிரச்சினையில் விஷாலோடு கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் எஸ்.வீ.சேகர் உள்ளிட்டவர்களும், ஆளும்கட்சி கொடுத்த தைரியத்தில் ரகளை செய்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் சங்கத்தில். கூடவே பாரதிராஜா தலைமையில் எதிர்ப்பாளர்கள் முதலமைச்சர் இ.பி.எஸ்.ஸைச் சந்தித்து விஷால் மீது புகார் சொல்லியிருக்கிறார்கள்.

முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கத்தின் நிர்வாகிகளாக... ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களை நீக்க சட்டத்தைத்தான் நாட முடியும். இவர்கள் முதல்வரை சந்தித்திருப்பதிலிருந்தே பாலிடிக்ஸ் பல்லிளிக்கிறதே...

-இரா.த.சக்திவேல்