அதிமுக இரு அணிகளாகப் பிரிந்திருந்த காலகட்டத்தில், 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திமுக, ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜா, ஜெ அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டஅதிமுக, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொண்டது. இதில் 225 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி. இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்து, டி. ராஜேந்தரின் தாயக மறுமலர்ச்சி கழகத்தில் இணைந்து, திமுக கூட்டணியோடு 1991 தேர்தலைச் சந்தித்த திருநாவுக்கரசு, தேர்தல் முடிவுகள் மற்றும் அதிமுக ஆட்சி குறித்து நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டி 27.7.1991 இதழில் வெளியானது.
ஜெயலலிதா எம்.ஜி.ஆர் அல்ல – திருநாவுக்கரசு பேட்டி!
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையில் தன் பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த திருநாவுக்கரசை அவர் வீட்டில் சந்தித்தோம்.
உங்களுடைய அரசியல் வாழ்க்கை பெரும்பாலும் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் என்ற வகையில்தான் இருந்திருக்கிறது. மிகக்குறைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களில் ஒருவராக இப்போது நீங்கள் இருக்கும் நிலையில் அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?
இதற்கு கொஞ்சம் விரிவாகப் பதில்சொல்ல வேண்டும். கடந்த எண்பத்தொன்பது தேர்தலுக்குப்பின் நான் எதிர்க்கட்சித் துணைத் தலைவரானேன். ஆனால் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா சபைக்கே வராதகாரணத்தால் நாற்பதாண்டுகால அரசியல் அனுபவமும் மூன்றுமுறை முதல்வராகவும் இருந்த கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது நான் எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றினேன். இப்போதும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபடி சிறப்பாக செயல்பட முடியும்.
ஆனால் அப்படிச் செயல்பட முடியாமல் ஆளும்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் தடுக்கிறார்கள். கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி பேசவிடாமல் செய்கிறார்கள்.ஏற்கெனவே கலைஞர் ராஜினாமா செய்து விட்டார். பண்ருட்டியாரும் சபைக்கு வராத சூழல். இந்தநிலையில் மிச்சமிருப்பது நான்தான். எனவேதான், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் அமைச்சராக இருந்தபோது தவறு நடந்ததாகவும் அதன் மீது விசாரணைக் கமிஷன் வைக்கப் போவதாகவும் பயமுறுத்தி சபைக்கு வராமல் என்னைத் தடுக்கப் பார்க்கிறார்கள்.
என்னை அவமானப்படுத்தியும் மக்கள் மத்தியில் எனக்குக் கெட்டபெயர் ஏற்படுத்துவதாகவும் கருதிக்கொண்டு புரட்சித்தலைவர் ஆட்சியில் ஊழல் நடந்ததாகப் பழி போடுகிறார் ஜெயலலிதா. இதன்மூலம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைக் கேவலப்படுத்துகிறார்கள்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் இறந்தபிறகு ஜெயலலிதா அணியின் பொருளாளராகவும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினராகவும் இருந்தேன். அப்போதெல்லாம் நான் அவருக்கு மிகப்பெரிய யோக்கியனாக இருந்தேன். இப்போது அவரை விமார்சனம் செய்கிறேன் என்பதால் ஊழல் விசாரணை என்கிறார். ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களை ஆதரித்த அமைச்சர்கள் மீதும் இதே போல் ஊழல் குற்றச்சாட்டுகளைத்தான் ஜெயலலிதா சுமத்தினார்.
எதிராக செயல்படுபவர்கள் மீது வீண் குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், மிரட்டுவதும் ஜெயலலிதாவின் இயல்பு. இதைக்கண்டு நான் பயப்பட மாட்டேன். ஜனநாயகரீதியாக சபையிலும் வெளியிலும் குரல் கொடுப்பேன். ஆளும்கட்சி செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவேன்.
ஏதோ ஜெயலலிதா முதல்வரான பிறகுதான் சட்டசபையில் கலாட்டா நடப்பதுபோல சொல்கிறீர்கள்..,எம்.ஜி.ஆர்.ஆட்சிக்காலத்தில் சட்டசபையில் கலவரம் நடந்ததில்லையா என்ன.,அவ்வளவு ஏன்?அப்போதைய முதல்வர் கருணாநிதி பட்ஜெட் படிக்கும்போது ஜெயலலிதாவும் அவரது அணியைச் சேர்ந்த உறுப்பினர்களும், ஏன் நீங்களும்கூட சேர்ந்து கலவரம் செய்ததில்லையா...அப்போது இது தவறு என்று நீங்கள் ஜெயலலிதாவுக்கு சுட்டிக்காட்டவில்லையே?
புரட்சித்தலைவர் ஆட்சியில் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடந்ததில்லை. குறைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்டிருந்த நிலையிலும் ரகுமான்கான் கடுமையாக விமர்சனம் செய்து பேசுவார். அவரை யாரும் அடித்ததில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது எங்கள் கட்சி உறுப்பினர்கள் யாராவது சத்தம்போட்டால் புரட்சித் தலைவர் அவரை அழைத்துக் கண்டிப்பார். ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்த போதும் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போதும் ஜெயலலலிதாவின் தூண்டுதலால் ரகளை ஏற்பட்டது. எனவே, ஜெயலலிதா முழு அரசியலுக்குள் நுழைந்த பிறகுதான் வரலாறு காணாத அளவில் சட்டசபையில் ரகளை ஆரம்பித்தது. இதையெல்லாம் தவறு என்று நான்அப்போதே சுட்டிக் காட்டினேன். இப்படி தவறான நடவடிக்கைகளை அப்போதே சுட்டிக் காட்டியதால்தான் என்னைக் கட்சியை விட்டு நீக்கினார்கள்.
ஆனால் நீங்கள்கூட ஜெயலலிதா அணியில் சேரப்போவதாக சொல்லப்படுகிறதே?
அது உண்மையல்ல.நான் அங்கு போக மாட்டேன். முதல்வரான பிறகும் கூட ஜெயலலிதா தனது நடவடிக்கைகளையோ மனோபாவத்தையோ மாற்றிக் கொள்ளவில்லை. அவருடைய ஆணவப்போக்கும் பிடிவாதமும் அதிகமாகி இருக்கிறதே தவிர குறையவில்லை.
அவரோடு இருக்கிற தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஏதோ தமிழ்நாடு ஜெயலலிதாவின் பூமி என்றும் ஜெயலலிதா எம்.ஜி.ஆரை விட பெரிய தலைவி என்றும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். புரட்சித் தலைவரின் பெயரை மறைத்து அவமானப்படுத்தி அவர் புகழை ஒழிக்கச் சதி செய்கிறார்கள். எனவே நான் அங்குபோய்ச் சேருவேன் என்னும் பேச்சுக்கே இடமில்லை.புரட்சித் தலைவரால் வளர்க்கப்பட்டவன் என்பதால் அவர் பெயரால் தொடர்ந்து கட்சி நடத்தி அவர் புகழ் பாடுவேன்.தொண்டாற்றுவேன்.
ஜெயலலிதாவின் ராட்சச வெற்றி எம்.ஜி.ஆரை நேசிப்பவர்கள் ஜெயலலிதாவை அவருடைய வாரிசாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதைத்தானே காட்டுகிறது?
ஜெயலலிதாவின் தற்போதைய வெற்றி என்பது ராஜீவ்காந்தியின் படுகொலையால் உருவான அனுதாப அலையால் ஏற்பட்ட வெற்றியாகும்.ஜெயலலிதா எம்.ஜி.ஆர். இல்லையென்பதையும், புரட்சித் தலைவரின் வழியில் அவர் செயல்படவில்லை என்பதையும் புரட்சித்தலைவரின் தொண்டர்களும் பொதுமக்களும் விரைவில் உணர்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தி.மு.க.வின் கூட்டணியாக நீங்கள் வெற்றிபெற்றீர்கள்.. இப்போது பாட்டாளி மக்கள் கட்சிமீது உங்களுக்கு ஒரு ‘சாப்ட்கார்னர்’ வந்திருப்பதாகத் தெரிகிறது. தி.மு.க.வும் பா.ம.க.வும் உடன்பட்ட கருத்துடையவை என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் தி.மு.க.வை விட்டுவிட்டு பா.ம.க.வோடு உடன்பட்டு செயல்படுவீர்களா?
பா.ம.க., தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனதா தளம், முஸ்லிம் லீக் போன்ற ஜெயலலிதா எதிர்ப்பு சக்திகளுக்குப் பாலமாக இருந்து பொதுப் பிரச்சனைகள் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண என்னால் முடிந்ததைச் செய்வேன். ஜெயலலிதாவும் அவருடைய போக்கும்தான் எனக்கு எதிரானது. உண்மையான புரட்சித் தலைவரின் புகழ்பாடுபவன் நான்தான் என்பதை எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் காலப்போக்கில் உணர்வார்கள்.
சட்டமன்றத்தில் பேசமுடியாத நிலைவந்தால் எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்வீர்களா?
செய்ய மாட்டேன். எத்தனை இடையூறுகள் வந்தாலும் சட்டமன்றத்தில் தொடர்ந்து ஜனநாயக முறையில் வாதாடவே முயற்சிப்பேன்.
தொடர்ந்து சினிமாத் துறையையும் தொடர்வீர்களா?
தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன். முடிந்தால் நடிப்பேன். ஆனால், எனக்கு அரசியலே பிரதானம். சினிமா இரண்டாம் பட்சம்தான்.
சினிமாவை உங்கள் அரசியல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவீர்களா?
மக்களை எளிதாக சென்றடையக் கூடிய சாதனம் சினிமாதான். எனவே, அதை புரட்சித்தலைவர் புகழ்வளர்க்கவும் கட்சிக்கொள்கைகளைப் பரப்பவும் பயன்படுத்துவேன்.
தனிமனிதனாக கட்சியை வைத்துக் கொண்டிருக்கிற நீங்கள் எப்படி கட்சியை வளப்படுத்துவீர்கள்?
அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பித்தது தனி மனிதனாகத்தான்.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தனிமனிதனாக இருந்துதான் கட்சியை ஆரம்பித்தார். என்னோடு எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல விசயம். மக்கள் நல்லெண்ணத்தைப் பெறும்வகையில் செயல்பட்டு தொண்டர்கள் ஆதரவு பெருகினால் தலைவர்கள் தன்னாலே வருவார்கள்.புரட்சித் தலைவரை நேசிக்கிற ஜெயலலிதாவை எதிர்க்கிற தொண்டர்கள் எல்லா மாவட்டங்களிலும் எங்களை ஆதரிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை பெருகும்.
அப்படியானால் உங்கள் வளர்ச்சி ஜெயலலிதாவின் வீழ்ச்சி அல்லது ஜெயலலிதாவின் வீழ்ச்சிதான் உங்கள் வளர்ச்சி என்று சொல்லலாமா?
சொல்லலாம்.
ஒரு கட்சிக்கும் அதன் தலைவருக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கம் இருக்கும். அது தவறென்று சொல்ல முடியாது. உங்களுக்கும் அப்படியொரு இலக்கு இருக்கிறதா? அது நிறைவேற எவ்வளவு காலம் பிடிக்கும்...என்று நினைக்கிறீர்கள்?
ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதோ முதல்வராக வேண்டும் என்பதோ அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது அல்ல. அது தமிழக மக்களின் கையில் இருக்கிறது.‘கீதையில் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னது போல நான் என்னுடைய ஜனநாயகக் கடமையைச் செய்வேன்.அவ்வளவுதான்.