கும்பகோணம் மகாமகக் குளத்தின் கிழக்குத் திசை படிக்கட்டில் அமர்ந்தபடி, இளங்காலைப் பொழுதில் பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார் காவேரி.
பரணி: மகாமக சீசன்ல வந்திருந்தா இப்பிடி ஹாயா ஒக்காந்து காலங்காத்தால சொப்பனத்துக்கு ஆசைப்பட முடியுமா? இல்லை, கோயில்கள் நெறைஞ்ச இந்த குத்துவிளக்கு பித்தளை நகரம் இப்பிடிச் சுத்தமா இருக்குமா?
காவேரி: மகாமகம்னு இல்லை. எப்பப் பாத்தாலும் செக்கடி மாதிரி கும்பகோணமே 23 வருஷமா அழுக்காத்தான் இருந்திச்சு. சீதேவி மாதிரி நகராட்சி ஆணையரா உமா மகேஸ்வரி வந்தாங்க. கோயில் நகரமே பளிச்சினு சுத்தமாயிருச்சு.
மல்லிகை: நான் அடிக்கடி இங்கே வந்திருக்கேன். கும்பகோணத்துக் குப்பைகளையும், அக்கம்பக்க ஊர்களின் குப்பைகளையும் அள்ளியாந்து அம்மாச்சத்திரம் பக்கத்தில கரிக்குளம்கிற எடத்திலதான் கொட்டி வச்சிருந்தாக. அங்கேயிருந்து அடிக்கிற நாத்தம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்குள்ளயும் வரும்.
காவேரி: உமாமகேஸ்வரி ஆணையரா வந்து ரெண்டு வருஷம்தான். மலை மாதிரி குமிச்சு வச்சிருந்த குப்பை போன இடம் தெரியலை. சிட்டி யூனியன் பேங்குக்காரங்க மூணு கோடி கொடுத்திருக்காங்க. நம்ம கவர்ன்மென்ட் 4 கோடி கொடுத்திருக்கு. தினமும் 80 தொழிலாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைனு பிரிச்சாங்க. மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு, கரும்பு விவசாயிகள் வாங்கிட்டு போனாங்க. மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை சிமெண்ட் ஆலைகளுக்கு கொடுத்தாங்க. இப்ப, குப்பை கொட்டியிருந்த 12 ஏக்கர் நிலம் ப்ரீ ஆயிருச்சு. வட மாநிலங்கள்ல இருந்து வந்து ஆணையர் உமா மகேஸ்வரிகிட்ட ஐடியா கேட்டுக்கிட்டு போறாங்கனா பாருங்களே...
மல்லிகை: ஆர்ப்பாட்டம் இல்லாம அமைதியா, அழகா ஒரு வேலை முடிஞ்சு தொடருதுனா அது பெண்களாலதான் முடியும்னு உமா மகேஸ்வரி நிரூபிச்சிருக்காக. எல்லா நகராட்சிகளும் மாநகராட்சிகளும் பின்பற்ற வேண்டிய திட்டம்தான்.
நாச்சியார்: ஆனால் எங்க புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அஞ்சாறு மாசம் முன்னாடி வந்த முதன்மைக் கல்விஅதிகாரி வனஜா செஞ்ச வேலையை வேற எந்த மாவட்ட கல்வி அதிகாரிகளும் பின்பற்றக்கூடாது.
காமாட்சி: ஏன்? என்னாச்சு?
நாச்சியார்: வாடகைக்கு வீடு பிடிக்கலை. பிரகதாம்பாள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆபீஸ் அறைகளில் ஒரு அறையை ரெடிபண்ணி ஏ.சி. லொட்டு லொசுக்கெல்லாம் வச்சு, அங்கே தங்கியிருக்கிறாக. 33 ஆயிரம் கரண்டு பில் வந்திச்சு. அந்தம்மா கட்டமுடியாதுனு சொல்லிப்பிட்டாக. பள்ளி நிர்வாகமும் ஆத்தாடி இம்புட்டா? எங்களால கட்டமுடியாதுனு சொல்லிப்பிடுச்சு. என்ன செய்ய முடியும்? "எங்க தலையெழுத்து வனஜா மேடத்துக்காக நாங்க கட்ட வேண்டியிருக்குனு' அவுகளுக்கு கீழ உள்ள அதிகாரிகள் கட்டியிருக்காக.
காமாட்சி: ஆனால் இப்படிப்பட்டவங்களுக்குத்தான் அதிகாரப் பதவிகள் கிடைக்கும். போளூர் தொகுதி எக்ஸ் எம்.எல்.ஏ. ஜெயசுதா ஞாபகம் இருக்கா?
பரணி: எம்.எல்.ஏ.வாக இருக்கும்போதே பணம் பணம்னு பறக்குதுனு இவங்க மேல நிறைய புகார்கள் தலைமைக்கு போச்சே...?
காமாட்சி: அதேதான். ஜெ. உசுரோட இருக்கும்போதே போளூர் ஒ.செ.யாக இருந்த ராஜன் ராஜினாமா செய்துவிட்டார். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் திருவண்ணாமலை வடக்கு மா.செ. தூசிமோகனும் ஜெயசுதாவைக் கூப்பிட்டு "போளூர் ஒ.செ. பொறுப்பை நீங்க பாருங்க'னு டெம்ப்ரவரியா சொன்னாங்க. போளூர் நிர்வாகிகள் எல்லாரும் கடுமையா எதிர்த்தாங்க. இவங்களை ஒ.செ. ஆக்கினா கட்சியில லஞ்சமும் கமிஷனும் தலைவிரிச்சு ஆடும்னு ஓ.பி.எஸ். வரைக்கும் பஞ்சாயத்து போச்சு. பிரயோசனமில்லை. ஆகஸ்ட் ஒண்ணாம் தேதி ஜெயசுதாவையே போளூர் ஒ.செ. ஆக்கிவிட்டார்கள்.
மல்லிகை: தொண்டர்களை நெனைச்சா பாவமா இருக்கு. சுத்த அப்புராணிகளா இருக்காக. நிர்வாண சங்கத்தில கோவணம் கட்ட நெனைச்சா தலைமை விடுமா?
பரணி: சேலம் எட்டுவழிச் சாலையை எதிர்த்து "என் நிலம் என் உரிமை' என்கிற கோஷத்தோடு மார்க்சிஸ்டுகள் நடத்தும் நடைபயண போராட்டம் வலுத்துக் கொண்டிருக்காமே?
நாச்சியார்: போராட்டத்திற்கும் சிறைச்சாலைக்கும் மகளிர் தோழர்கள் பயப்படமாட்டார்கள் என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகிக்கொண்டிருக்கு இல்லியா?
காமாட்சி: அதேதான். ஆகஸ்ட் ஒண்ணாந்தேதி நடைபயணத் தோழர்களை திருவண்ணாமலையில் ஒரு மண்டபத்தில் வச்சிருந்தாங்க. ரவையைக் காட்டிலும் காய்ஞ்ச மிளகாய் அதிகம் போட்ட உப்புமாவை ராத்திரி 10 மணிக்கு தோழர்களுக்கு போலீஸ் குடுத்துச்சு. காரம் தாங்காமல் கண்கள் குளமானாலும் சாப்பிட்டார்கள். பிறகு "நாங்க ஜெயிலுக்கு போகப் போகிறோம்' என்று கழுத்தில, காதில் கிடந்த நகைகளைக் கழற்றி சில தோழர்களிடம் ஒப்படைச்சாங்க மகளிர் தோழர்கள்.
காவேரி: பெண்களை விடுதலை செய்யலையா?
காமாட்சி: எல்லாரையும் விடுதலை செஞ்சாங்க. உ.வாசுகி தலைமையிலான 13 மகளிர் தோழர்கள் உட்பட 90 தோழர்களும் விடுதலையானதும் கோஷங்களோடு நடைபயணத்தை தொடர்ந்தாங்க.
மல்லிகை: அந்த ராத்திரியிலயா?
காமாட்சி: ஆமா! பதறிப்போன வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, மறுபடியும் அவங்களை கைது செய்து மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிபதி நீதிமன்ற ஜாமீனில் அவங்களை அனுப்பிவைத்தார்.
பரணி: வெய்யில் சுள்ளுனு ஏறுது. எந்திரிங்க கிளம்பலாம்.
-து.ராஜா, செம்பருத்தி, க.செல்வகுமார்