Advertisment

சட்டசபையின் ஆக்‌ஷன் கிங் இவர்... இவரது மோதிரத்தை பார்த்தால் மற்ற எம்.எல்.ஏக்கள் மிரள்வார்கள்!

TamilNadu Assembly Thamaraikani incident

அரசியலில் பரபரப்புகளுக்கும் அதிரடிகளுக்கும் பஞ்சமில்லாத ஒரு இடம் என்றால் அது பிரச்சார மேடைகள் தான். தேர்தலின் போது சில வார காலங்கள் மட்டுமே காணக்கிடைக்கும் இந்த பிரச்சாரக்கூட்டங்களை போல, தேர்தல் முடிந்து ஐந்தாண்டுகாலம் ஏதேனும் ஒரு கட்சி ஆட்சி செய்யும்போது சட்டப்பேரவைக்குள் நடைபெறும் விவாதங்களும் அதிரடி மற்றும்பரபரப்புகளுக்குஎவ்விதத்திலும் பஞ்சமில்லாதவையே. அண்மைக்காலங்களில் விஜயகாந்தின் அதிரடி அட்டகாசங்கள், ஸ்டாலின் சட்டை கிழிப்பு அரசியல் என பரபரக்கும் சட்டசபை, இதற்கு முன்பு பல காரசார சம்பவங்களை கண்டுள்ளது.

Advertisment

அவ்வாறு மூணாம் தேதி கூடிய முதல் சட்டமன்றத்தில் தன் கன்னி உரையின் போது முதல்வர் ஜெயலலிதா ’’சபையின் கண்ணியம் காப்போம், கரும் புள்ளிகளை அகற்றுவோம்’’ என்று பேசி இருந்தார். மறுநாள் காலை 4.7.91. காலை, மீண்டும் சபை கூடியது. ஜெயலலிதாவின் பேச்சை அப்படியே அடி பிறழாமல் தொடர்வது என்று அணிவகுத்து வந்திருந்தனர் எம்.எல்.ஏக்கள். ‘’கண்ணியம் மிகுந்த’’ சட்டசபையில் கவர்னர் உரைக்கு முன் ‘’கவர்னரே தேவையில்லை’’ என்ற கருத்தை முன் வைத்துப் பேசினார் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன். அவரது உரை ஆங்கிலத்தில் இருந்தது. ஏலேய், இங்கிலீசுலயா பேசுற.. ’’மிஸ்டர்...உட்ட்காருடா...’’ கண்ணியம் மிக்க குரல் கொடுத்தவர் ஜெயலலிதாவிடம் சமீபத்தில் சரண் அடைந்த தாமரைக்கனி. மீண்டும் தன் உரையைத் தமிழில் தொடர்ந்தார் பண்ருட்டியார். ‘’உட்காருடான்னா உட்காரு’’ ‘’நேத்தும் இப்படித்தான் கலாட்டா பண்ணுனீங்க.... இன்னைக்காவது பேச விடுங்க’’ என்றபடி தன் உரையை மீண்டும் தமிழில் தொடர்ந்தார் பண்ருட்டியார்.

TamilNadu Assembly Thamaraikani incident

அவ்வளவுதான். ‘’டமார்...டமார்’’ கூடவே அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களான தணிகை பாபு, கோவை ராஜு இருவரும் கோதாவில் இறங்கினார்கள். சற்றே தள்ளாடி, அதன் பின் நிமிர்ந்தும் பார்க்காமல் தன் உரையைத் தொடர்ந்தார் பண்ருட்டியார். அவருக்குப் பின்னால் சந்நதம் கொண்டவராய் கண்களில் ஆவேசமும், அதிகார ‘’போதையேறிய’’ சிவந்த கண்களுமாய் அடித்த அதே வெறியோடு கைச் சட்டை மடிப்பை சுருட்டி விட்டபடி தாமரைக்கனி. ‘’கண்ணியம் மிகுந்த’’ சபை ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனது. கவர்னரும் ஜெயலலிதாவும் புன்னகைத்தபடி உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். இந்த ‘’அதிர் டமார்’’ அவர்கள் காதில் மட்டும் விழாதது போல.

Advertisment

திருநாவுக்கரசு எழுந்தார். பண்ருட்டியாரை அடித்ததைக் கண்டித்துப் பேசினார். ‘’பேச்சை நிறுத்துடா...பீ கேர்புல்...’’ தாமரைக்கனி தன் போதையின் உச்சத்தில் தமிழில்(?) கத்தினார். திருநாவுக்கரசு வேகவேகமாய் வெளியேறி விட்டார். கூடவே சி.பி.ஐ., சி.பி.எம். எம்.எல்.ஏக்களும் இதைக் கண்டித்து வெளியேறினர். இந்த கண்ணியம் மிகுந்த காட்சிகள் வீடியோ வாகவும், புகைப்படமாகவும் அரசு தரப்பில் எடுக்கப் பட்டிருக்கிறது. இந்தக் காட்சிகள் மக்கள் மத்தியில் வெளியிடப் படுமானால் தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே ‘’ஜெ’’தலைமையிலான சட்டமன்றக் கூட்டம்தான் கண்ணியம் மிகுந்தது என்பது வெட்ட வெளிச்சமாகும்.

தஞ்சம் என்று வந்த தாமரைக்கனிக்கு ஜெயலலிதா அடைக்கலம் அளித்தது எந்தத் தகுதியின் அடிப்படையில் என்பது இப்போது மக்களுக்குப் புரியும்படி செய்து விட்டார் தாமரைக்கனி. நான் ஒன்றும் திரௌபதி இல்லை. – பண்ருட்டியார். சம்பவம் நடந்து முடிந்தவுடன் சட்டசபை வாசலில் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தோம். ‘’1989-ல் தனக்குப் பாதுகாப்பில்லை என்று சட்டசபையைப் புறக்கணித்தார் ஜெ. தற்போது எனக்கு உயிருக்குப் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை ஜெயலலிதாவும் பார்த்துக் கொண்டு சும்மாதான் இருந்தார்.

கவர்னர் உரை நிகழ்த்துவதற்கு முன் எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துகளை சொல்வதும், கவர்னர் உரையைப் புறக்கணிப்பதும் புதிது அல்ல. கருத்தைச் சொல்வதற்கே இவ்வளவு நடந்திருக்கிற இந்த சபையில் எதிர்க் கட்சியினர் உயிருக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? ‘’ஜெயலலிதாவின் ஜனநாயக செயல்முறைகள் எப்படி இருக்கும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது’’ என்றார் அவர். பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக இனி சட்டசபையைப் புறக்கணிப்பீர்களா? என்றோம். ‘’அப்படியொரு சபதம் எடுக்க நான் ஒன்றும் திரௌபதி இல்லையே..’’ என்று அந்தச் சூழ்நிலையிலும் சிரித்தபடி பதில் அளித்தார் பண்ருட்டியார். கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பழனிச்சாமி (சி.பி.ஐ.) மிகச் சொற்பமான எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களில் ஒருவரான திருத்துறைப்பூண்டி பழனிச்சாமியை இது பற்றி கருத்துக் கேட்டோம். கடந்த தி.மு.க. ஆட்சியின் தொடக்கத்தில் அ.தி.மு.க. சார்பாக எஸ்.ஆர்.ராதாவும், காங்கிரஸ் சார்பாக குமரி ஆனந்தனும் கவர்னர் உரையைப் புறக்கணித்தார்கள். இப்போது அதையேதான் பண்ருட்டி ராமச்சந்திரனும் செய்தார். ஜனநாயக நெறிமுறையில் அவர் கருத்தைச் சொல்லும் போது அதைத் தடுக்க நினைப்பது எந்த விதத்தில் சரியாகும்? சபையின் கண்ணியம் காப்போம், கரம் நீட்ட மாட்டோம் என்று முதல்வர் தந்த வாக்குறுதி ஒரே நாளில் காற்றோடு போய் விட்டது.

admk App exclusive jayalalitha
இதையும் படியுங்கள்
Subscribe